Friday, February 20, 2015

நிராகரிப்பு

தோழி ஒருத்திக்காக காட்டப்பட்ட அன்பு அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது,
கண்ணீர்கள் தண்ணீர்களாக சித்தரிக்கப்பட்டுவிட்டது.

அங்கீகரிப்படாத கண்ணீரையும், அன்பையும் நான் ஏன் சுமந்துகொண்டிருந்தேன் என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை,

ஒரு தோழியின் நிராகரிப்பு அவ்வளவு அடர்த்தியாக உள்ளது,
கருணையே இல்லாத முழு இருட்டை போல நம்மை ஏதுமற்றவனாக மாற்றிவிடுகிறது.

தோழியின் மீதான கோபத்தை என் கைப்பேசியிடம் காட்டுகிறேன், இனி நான் உன்னை தொடப்போவதே இல்லை என்று சபதம் பிடித்துக்கொள்கிறேன்.

தோழியின் மீதான கோபத்தை, என் இன்னொரு தோழியிடம் காட்டுகிறேன், அவளிடம் கோபித்துக்கொள்கிறேன்.

மற்றுமொரு தோழியின் அன்பு வார்த்தைகளை நான் நிராகரிக்க தொடங்கிவிட்டிருந்தேன்,

மழைக்காலத்தில் வெதுவெதுப்பிற்காக ஒளிந்துகொள்ள நினைக்கும் ஒரு குட்டி பூனையைப்போல அலைந்துகொண்டிருக்கிறேன்,

தூக்கிட்டு செத்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் வாழும் ஆசையை நினைத்துக்கொண்டிருக்கிறேன்,

புத்தகத்தை வெறித்தனமாக புரட்டிக்கொண்டிருக்கிறேன்,

என் துக்கங்களை ஒரு துளிகூட கீழே சிந்தாமல் குடித்துக்கொண்டிருக்கிறேன்,
அதன் வெறுமையை, அதன் தனிமையை, அதன் இருட்டை, அதன் திமிரை, அதன் கோபத்தை தனியாக எதிர்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன்.

முழுவதுமாக ஒரு நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்வது ஏனோ ரொம்பவும் பிடுத்துவிட்டது.

இப்பொழுது அதே தோழியிடம் மீண்டும் பழகுகிறேன், பாறமற்றவனமாகவும், கண்ணீரற்றவனாகவும்.
இனி அவள் நிராகரிக்க என்னிடம் ஒன்றுமே இல்லை, என்னைத்தவிர.