Tuesday, September 20, 2016

மாலதியின் கடைசி நாட்கள்


தன் நீங்கா வலிக்கு
மருத்துவம் பார்த்து
கேன்சரோடு திரும்பிய
மாலதியின் கடைசி
நாட்கள்

கீமோ இருக்கு மாலதி
கல்லைக்கூட கரைக்கும்
என்ன.....
முடி கொட்டும்
மொட்டை அடித்துக்கொள்
மூட்டு வலிக்கும்
படுக்கையில் படுத்துக்கொள்
உணவு வேண்டாம்
மாத்திரை விழுங்கிக்கொள்
3 நாளில் கேன்சர் கரையும்
மூத்திரம் முழுக்க மஞ்சளாய்ப் போகும்

அய்யோ அம்மா...
இரத்தம் இரத்தம்.....
கண்ணங்கள் ஒட்டி
நடை தளர்ந்து
டாக்டர் கை பிடித்து
கரைந்ததா என்கிறாள்.

நிதானம் மாலதி
வயிற்றில் கரைந்து,
அடிவயிற்றில் பரவுது
தண்ணீர் கொல்லாது,
தூக்கம் வராது,
எப்படியாவது
மாத்திரையை மட்டும்
திண்றிடு தீர்த்திடு
அடுத்த கீமோவில்
கண்டிப்பாய் ஒழித்திடலாம் என்கிறார்.

வலி வலி வலி வலி
வலி வலி வலி வலி
பேச்சும் வலி
மூச்சும் வலி
படுக்கையில் விழித்தாள்
சுற்றி சொந்தங்கள்
அழுகிறாள் அழுகிறாள்
அழுகிறாள் அழுகிறாள்
அழுகிறாள் சிரிக்கிறாள்

ஒரு நபருடனான கடைசி சந்திப்பு
எப்படியெல்லாம் நிகழக்கூடாது
என்று நினைத்தாளோ,
அதுவெல்லாம் நிகழ்கிறது.

"மாலதி தைரியமாக சாவு
பிள்ளைகளை நன்றாய் வளர்த்திருக்கிறாய்
பிழைத்துக்கொள்வார்கள்"

அவளுக்கான ஆறுதல்களை
நினைத்து நினைத்தே
அழுதாள் அழுதாள்
அழுதாள் சிரித்தாள்
சிரித்தாள்
இறந்தாள்........

Monday, September 19, 2016

இந்த மரணத்தை...

இந்த கவிதைகளை
ஒரு தீப்பந்தத்தைப் போல
கையிலேந்தியபடிதான்
ஒவ்வொரு மயானத்தையும்
தனிமையில் கடந்துவருகிறேன்.

கழுகின்காலில் சிக்கித்துடித்து
தப்பி விழும் பாம்பைபோல
மரணம் தப்பி மரணிக்கிறேன்
வாழ்ந்தே தீரவேண்டும் என்று...

விலகல்

அன்பே
முழுமையான விலகுதலுக்கு
இன்னும் என்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளவில்லை

எனக்கு சில
காரணங்களும், காலங்களும்
தேவையாக இருக்கிறது.

என் காதலை இதுவரை உன்னிடம்
சொன்னதே இல்லாத பட்சத்தில்
"ஏன் இந்த
தடாலடி முடிவு ?"

புறநானுாறையும், சிலப்பதிகாரத்தையும் மொபைல் ஆப்பில் பார்த்து
என்னை பழமென்று நினைத்துவிட்டாயா ?

எனக்கு வில்லியம் ஹாம்சையும்
அர்த்தர் ஸ்கோஃபன்ஹியரையும்
கூட தெரியும்.

ஆடம்பர உடைகள் மட்டும்தானே
பிடிக்காதென்றேன்,
கண்களையும், பற்களையும்
கண்ணக்குழியையும் அல்லவே !!

சொல்லாமல்
காதல் செய்ய
கற்றுக்கொடுத்து
இப்படி பாதியில் விலகுவது
சரிதானா ?
சரி
வருத்தம் கொள்ளாமல்
விலகுவது எப்படி என்பதையாவது
விளக்கிவிட்டு போ...

ஆலிங்கனம் செய்து,
கண்ணீர் சிந்தி,
விரல் நுனிவரை விடைதரும்
சம்பிரதாயங்களை
தினம் தினம்
நான் கனவில் நடத்திக்கொள்கிறேன்.

Saturday, September 17, 2016

நிர்வாணம்

குளியலைறையில் நீண்ட
கண்ணாடி வைத்திருப்பவர்களை
மிகப் பெரிய கலைஞர்களாக நினைத்துக்கொள்.

நிர்வாணம் அவ்வளவு அழகு
யாருமற்ற வீட்டில்
நிர்வாணமாக நடந்து கொண்டு
நிர்வாணமாக சமைத்துக்கொண்டு
நிர்வாணமாக படித்துக்கொண்டு
நிர்வாணமாக படுத்துக்கொண்டு
நிர்வாணமாக குளித்துக்கொண்டு

ஏதோஒன்றில் இருந்து முழுவதுமாக நம்மை விடுவித்துக்கொண்டு வாழ்தல் அவ்வளவு அலாதியானது.

நனைந்த உன் நிர்வாண உடம்பை ஒருமுறையேனும் நீ பார்க்கத்தான் வேண்டும்.

தகித்த நீர்த்துளிகள்
மெல்ல வழிந்து
உன் வேட்கையின் சிரிப்பில்
உயிர்ப்பெரும் இன்னொரு
நிர்வாணக் குளியல்.

Tuesday, September 6, 2016

பிக் பேங்

நீர்க்குமுழியின் நொடிக் கண்ணாடி சிதறுகிறது. நீங்கள் அதன் சப்தங்களை கேட்டதுண்டா ?
"An explosion". டமார்ர்...

இந்த பூமி அப்படித்தான் வெடிக்கவேண்டும்.

ஜன்னலோரம், ஈரக்காற்றினை சுருட்டியபடி, சாம்பல் போர்வையை போர்த்தியபடி மெல்ல நகரும் ராணுவ வாகனங்களை வானத்தில் பார்த்ததுண்டா ? வெடிக்கும் இடிகள், சிதறும் ரவைகள் என்று ரம்யமாக நடக்கும்
மழைக் கலவரத்தை நீங்கள் ஒருமுறையாவது ரசித்திருப்பீர்கள்.
Grey...everywhere, evrything it would be grey.

இந்த பூமி அப்படித்தான் வெடித்துச்சிதற வேண்டும்.

ச்ச !! எவ்வளவு குரூரம். மன்னித்துவிடுங்கள்.
பிரமிடுகளை தலைகீழ் கவிழ்த்து ஓங்கி அடித்து பூமிக்குள் அனுப்பி,
கட்டிடங்களை, மலைகளை கவிழ்த்து...ஷிட்....வேண்டாம் வேண்டாம், அது கடினம். பூமிச் சட்டையை மட்டும் கழட்டி எரித்துவிடுவோம். Its simple and its full of dirts.

பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் மட்டும் பறந்து செல்லட்டும், கண்டிராத கிழமையொன்றில் என்னை தூக்கியெரியட்டும்.
மனைகளும், மலைகளும், மலர்களும் மட்டும் இருக்கும், இல்லாத இடமொன்றின் அருகில் இருக்கும் அருவியில் குளித்து களித்து காலம் கழியட்டும்.