Friday, February 26, 2016

ஜிரோ ட்ரீம்ஸ் ஆஃப் ஸூஷி

ஜிரோ ட்ரீம்ஸ் ஆஃப் ஸூஷி(Jiro dreams of shushi) ஒரு டாக்குமென்டரி திரைப்படம். ஹீரோவின் பறக்கும் என்ட்ரி, காற்றில் முடியை சரிசெய்தபடியே ஸ்லோ மோஷனில் நடந்து வரும் ஹீரோயின், சமீபத்திய திரைப்படங்களில் வரும் ஹிந்தி, அல்லது வெளிநாட்டு வில்லன், காதல், காமெடி மாதிரியான எழவெல்லாம் இருக்காது. ஒன்றரை மணிநேரமும், 85 வயது மதிக்கத்தக்க மனிதர் ஜினோவைப் பற்றி எடுத்திருப்பார்கள். "ஸுஷி" என்ற ஒருவகை உணவின் மேலான அவரது ஈடுபாடு, அற்பனிப்பு பற்றி "Phillip Glass"இன் "I am going to make a cake", Mozart இன் 21st Piono கான்ஸர்ட் போன்ற பின்னணி இசையைக் கோர்த்து, மகிழ்ச்சி, வெற்றி, உயர்வு, வெறி மற்றும் இன்ன பிற தற்காலிக மனநிலைகளை உண்டாக்கும் நரம்பு மண்டகங்களை ஒரே அடியாக உசுப்பிவிடும்படியாக மிகவும் நேர்த்தியாக படைக்கப்பட்டிருக்கிறது. படிப்பேதும் கிடையாது, ஆனால் உலகிலேயே மிகச்சிறந்த ஸூஷியை எப்படி தயாரிப்பது என்பது மட்டும் தெரியும்.
கிட்டத்தட்ட "பாய்ஸ்" படத்தில் செந்தில் கூறும் "அய்யோத்தி மண்டபத்துல எப்ப ஆக்கார வடசல் போடுவாங்க,அரசியல் வாதிங்க எப்ப அன்னதானம் போடுராங்க, ஏ.ஆர்.ரஹ்மான் வீட்ல, எப்ப பிரியாணி போடுறாங்க, விஜயகாந்த் ஆபிஸ்ல எப்ப கறிசோறு போடுறாங்க, மழ கோட்டு, கொட, இஸ்திரிபொட்டி, தய்ய மிஷியன், குருட்டு கண்ணாடி, எப்பெப்ப, எங்கெங்க குடுக்குறாங்கனு எனக்கு மட்டும்தான் தெரியிம்" என்கிற வசனத்தின் ரிச் வெர்ஷன்தான் ஜினோ. அவரது கடையில் முன்பதிவு செய்யாமல் சாப்பிட முடியாதாம். 30000 yen கொடுத்தால்தான் ஒரு சீட்டை புக்செய்ய முடியும் என்பது ஒருபுறம் இருந்தால், ஒபாமாவே இந்த டாக்குமென்டரியை பார்த்தபின், ஜப்பான் பயணத்தில், இவர் கடைக்குச் சென்று ஸுஷீ சாப்பிட்டாராம்.
"https://m.youtube.com/watch?v=GYN7p8dvr64"

Monday, February 15, 2016

அதேதான்

நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை,
உங்கள் தலையில்
ஒரு கொம்பை
வைத்துக்கொள்ளுங்கள்.
நீண்ட
வளைந்த
கூர்மையான.
கான்டாமிருகம் போல்
மூக்கிலிருந்து மேல்நோக்கியோ,
காளையைப் போல்,
காதின் பின்புறுமோ.
உங்கள் மீது
அன்பு காட்டியவர்கள்,
சாட்டையை கொண்டோ,
கொம்பை கொண்டோ,
கயிற்றை கொண்டோ
முதுகில் அடித்து இழுப்பார்கள்,
மூக்கை இருக்கி
அடக்குவார்கள்,
அவர்கள்அமைத்த பாதையில், நீங்கள் பத்திரிமாக நடக்க உங்கள் கால்களில் லாடம் கட்டுவார்கள்.
கவலைப்படாதீர்கள் இவர்கள் உங்களுடைய
பாதுகாவலர்கள்,
உங்களை நல்வழிப்படுத்துபவர்கள்,
இவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

ம் அதேதான்.....

Wednesday, February 10, 2016

காதலும், சாமிப்படமும்

காலேஜ் காதல் என்றாலே ஃபன்தான். சுயசிந்தனை இல்லாமல் கையெழுத்திடப்பட்ட நான்கு வருட பாண்டு பத்திரம் அது. நரம்பும், சதையுமாய், பின்னிப் பினைந்து "லவ் யூ", "மிஸ் யூ" என்று சுற்றித்திரிந்த ஜீவன்களெல்லாம் டாட்டா காண்பித்து பிரியும் சம்பிரதாய சடங்கு அது.  சில அரைவேக்காடுகள் செய்யும் தத்ரூபக் காதலை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். இந்த வாய்ப்பை எனக்களித்த நண்பன் சரத் குமாருக்கு என் நன்றியை மனமாற தெரிவித்துக்கொள்கிறேன்.

டிஜிடல் இமேஜ் ப்ராஸஸிங்க் தேர்வு. முந்தைய நாளின் ஒரு நீண்ட இரவின் விளிம்பில், சென்னையில் இருந்து அந்த காதல் மன்னன் வந்திருந்தான். யூசுவலாக வந்ததும் புத்தகத்தை விரித்து படிக்க தொடங்கிவிடுவான். கம்மல், வளையல், குடுமி, தாடி என்று முரட்டுத்தனமாக சுற்றித்திறிவான். கெட்ட வார்த்தைகளை நேர்த்தியாக பயன்படுத்தி சிரிக்க வைப்பவர்களில் இவனும் ஒருவன். தினமும் மாலை நேரங்களில் ஃபீமேல் ஜெயில் பஸ்டாப் வரை சென்று டீ குடித்துவிட்டு வரும் அந்த முப்பது நிமிடமும் சிரித்துக்கொண்டே இருப்போம், யாரையாவது, எப்படியாவது ஒரு பெண்ணிடம் வம்பிழுத்துவிடுவான். காதல் சலனமற்ற அந்த குளத்தில் யார் எரிந்த கல்லோ தெரியவில்லை, தனியரையில் கையை கிழித்து ரத்தம் சொட்டச் சொட்ட சுவரில் அவளுடைய பெயரை எழுதிக்கொண்டிருந்தான். "வளர்மதி".

"வளர்மதி" எதார்த்தமான பெண். கேஷுவலாக பழகுவாள். "சந்தோஷ் சுப்பிரமணியம்" படத்தில் வரும் ஜெனிலியாவின் சில கேரக்டர்களை உள்வாங்கிக்கொண்டவள். பர்த்டே, ஒரே கலர் ட்ரெஸ் என்பதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் சாக்லேட் கேட்டுவிடுவாள். ஒருமுறை கேட்கவும் செய்திருக்கிறாள்.  கண்ணாடித்தொட்டிக்குள் தனியே சுற்றிக்கொண்டிருந்த ஃபைட்டர் ஃபிஷ்ஷுக்கு கோல்டு ஃபிஷ்ஷை ஜோடியாக்கிய கதையாய், மெஸேஜ், கால், மீட்டிங், சாக்லேட் என்று காதலில் விழுந்து தொலைந்து கடைசியில் கையறு நிலைக்கே வந்துவிட்டான்.

பாழாப்போனவன் கைய கிய்ய அறுத்துவிட்டு செத்து கித்து போய்விடுவானோ என்று விடிய விடிய இவனை உட்காரவைத்து வெரிக்க வெரிக்க வேடிக்கை பார்த்து, அடுத்த நாள் பரீட்சையில் அரியர் வாங்கியவனின் சாபமோ என்னவோ, கோட்டை, செங்கல், தேவதை, சொர்க்கம், மரணம், தெய்வீகக்காதல் என்று உளரித்திரிந்தவனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிய அடுத்த நாளே இரயிலில் விழுவதற்காக தண்டவாளத்தை நெருங்கியிருக்கிறான்.

இதனை அவன் சொல்லிக்கொண்டிருக்கொண்டிருக்கும் அந்த ஒரு நிமிடம், ஒட்டுமொத்த ரூமுமே காதலின் புனிதத்தை உணர்ந்த புனிதர்களாகவே மாறியிருந்தோம்.

"ஏன்டா சரத் சாகல ?"

யாரோ ஒருவன் இப்படிக்கேட்க.

"பஜார் நியாபகம் வந்துவிட்டது, நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு நான்கு சாமிப்பட கேசட்டை சலிக்க சலிக்க பார்த்தேன். மூடு மாறிவிட்டது. எல்லாம் அந்த கடவுளின் கிருபை என்றான்"

வளர்மதியிடம் கை அறுத்துக்கொண்டதை பற்றி தகவல் தெரிவித்தபோது, "அவன் செத்தா எனக்கென்ன என்றாள்".