Saturday, April 30, 2016

ஓவியர்கள்

உங்கள் வாழ்க்கையை கடந்துபோகும் ஒவ்வொருவரும்,
உங்களை ஓவியங்களாக வரைந்துகொண்டிரு
க்கிறார்கள்.
நீங்கள் பேசும்
வார்த்தைகளை வண்ணங்களாகவும்,
பார்க்கும் பார்வைகளை கோடுகளாகவும், உதவும் உதவிகளை வளைவுகளாகவும், சித்தரித்துக்கொ
ண்டிருக்கிறார்கள். ஓவியத்திற்கான குணாதிசயத்தை வெளிப்படுத்த,
மீசையையும், உடையையும், சிரிப்பையும், முக பாவனைகளையும்
அதில் லாவகமாக தினித்துவிடுகிற
ார்கள்.
பின்னர் அவைகளுக்கு
உங்கள் பெயரை வைத்துவிடுகிறார்கள்.
அன்புடன் அழைக்கும் உங்கள் பெயரின் பிம்பம்,
நீங்கள் கண்ணாடியில் பார்க்கும் பிம்பமென நினைத்து சிரிப்பீர்கள்.
உண்மையில் அவைகள் அதுவாகவே இருப்பதில்லை. இன்னும் வண்ணங்கள் தீட்டப்படாத கோட்டோவியமாக நீங்கள் உதாசினப்படுத்தப்பட்டிருக்கலாம். உங்கள் முகங்களை
அவர்கள் அகோரமாக வரைந்திருக்கலாம்
அல்லது
வெறுப்பில் சிதைத்திருக்கலாம். வரையப்படாத வெள்ளை காகிதத்தின் பெயர்களாகவும் இருந்திருக்கலாம்.
நீங்கள் இனி ஜாக்கிரதையாக திரும்ப வேண்டும்.
உங்கள் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை நீட்டியபடி,
உங்களை அன்புடன் அழைக்கும் கொலைகாரர்கள் உங்களுடனேயே இருக்கிறார்கள்.

என்னை பயம் சூழ்ந்துகொள்ளும் கனத்தில்,
ஒரு இருட்டு அரையில்,
என் ஆடியின் கருப்பு பிம்பத்தை பார்த்தபடி என்னை நானே பெயரிட்டு அழைத்துக்கொள்ளும்போதும்....
உன் குரல் !!!

Sunday, April 10, 2016

ஹவர் சைக்கிள்

"ஹவர் சைக்கிள்" எடுத்து சைக்கிள் கற்றுக்கொள்ளும் மழலைக்கூட்டங்கள், பரிணாம வளர்ச்சி பெற்று ஆன்ட்ராய்டு கேம் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். முன்பொரு காலத்தில் நாங்கள் சைக்கிள் கடை வைத்திருந்தோம். மூன்று வயது சிறுவர்கள் முதல், வேலைக்குச் செல்லும் அங்கிள்கள் வரை, அவரவர்கள் ஓட்டுவதற்கேற்ப சைஸ் வாரியாக சைக்கிள்கள் இருக்கும். காலை ஏழுமணி ஆனதுமே, முத்து டீக்கடையின் அடிபம்பில் வாளி தண்ணீர் அடித்து கொண்டு வந்து, வாசலில் தெளித்து, மிச்சம் இருக்கும் தண்ணீரை உடைந்த டப்பில் பஞ்சர் ஒட்டுவதற்காக ஊற்றி, சைக்கிள்களை இறக்கி, பைன்டிங் அட்டை போட்ட கணக்கு நோட்டில், ஒரு புதிய பக்கத்தில் தேதியும், உலாபமும் எழுதி முடித்து, என் தற்காலிக பொறுப்பை தாத்தாவிடம் கொடுத்துவிட்டு ஸ்கூலுக்கு கிளம்பி விடுவேன். சைக்கிள்களின் அடையாளங்களுக்கு மட்கார்டில் நம்பர் வரைந்து, கம்பேனி அக்ரானிமை (Acronym) கீழே பதித்துவிடுவோம்.
BCW - பாலா சைக்கிள் வொர்க்ஸ்.

சின்ன சைக்கிள்களுக்கு, 1 மணிநேரத்திற்கு மூன்று ரூபாய் வாடகையும், ப்ரேக் பிடித்தால் டயர் தேயக்கூடிய, இரண்டு மிதியில் அதிவேகத்தை பிடிக்கக்கூடிய அட்வான்ஸ்டு ஹை பவர் வண்டிகளுக்கு நான்கு ரூபாய் வாடகையும் வசூலிக்கப்படும். "எனக்கு ரெண்டானம்பர் வண்டிதான் வேணும்" என்று பொடிசுகள் காத்து கிடந்து எடுத்துச்செல்வார்கள். ஒவ்வொரு பத்து நிமிடத்துற்கும், வாசலில் தொங்க விடப்பட்டிருக்கும் கடிகாரத்தில் "முள்ளு எதுல இருக்கு" என்று பார்ப்பதற்கு கடையண்டை வந்து வந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆபிஸ் பிரமுகர்கள் ஒரு நாள், ஒரு வாரம் என்று வண்டியை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்த நினைவுகள் இருக்கிறது.

நாளின் முடிவில் ஒரு பக்கம் முழுக்க குறித்து வைக்கப்பட்ட தொகையை, கணக்கு போட்டு, கல்லாவில் இருப்பதை டேலி செய்து பார்த்துக்கொள்வேன். தாத்தாவின் சிகரட், டீ, கணக்குகள் எல்லாம் காத்தடிப்பது, பஞ்சர் ஒட்டுவது என்று கணக்கில் காட்டப்படாத பணத்தில் செலவழிந்திருக்கும். விடுமுறை காலங்களில் 3, 4 பக்கங்கள் வரை, பெயர்கள் நிரம்பி வழியும்.
எதைக்கேட்டாலும் தாத்தா வாங்கி தந்துவிடுவார். "மலையால்தார்" கடையில் எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். அங்கு அவருக்கென்று சாக்லெட் டப்பிகளுக்கு இடையில் சொருகப்பட்டிருக்கும் சிகரட் அட்டையில் அக்கௌன்டுகள் குறிக்கப்பட்டுவிடும். இவைகளெல்லாம் எப்படி அழிந்தது என்பதை இன்று வரை யூகிக்கமுடியவில்லை. பக்கங்கள் குறைந்து, வரிகள் குறைந்து, சைக்கில்கள் குறைந்து மெது மெதுவாய்  தொழிலே முடங்கிப்போனது.
மாயை !! இப்பொழுதும் சின்ன சைக்கிள்களை ரோட்டில் பார்க்க நேர்ந்தால், நம்பர்கள் வரையப்பட்டிருக்கிறதா என்று ஒரு முறை பார்த்து சிரித்துக்கொள்வேன்.

Thursday, April 7, 2016

பைத்தியக்கவி - 3

பலிபீடத்தில் தலை வைத்து காத்துக்கிடக்கிறேன்.
நீள்வாளின் கைப்பிடித்து,
ஓங்கி ஒரு வெட்டிட்டுப்போ ! ஆழ்மனதில் உருண்டோடிக்கொண்டிருக்கும் அருவிகள் முழுக்க சிவந்துபோகட்டும்.
உச்சி வெயிலில்,
புருவங்கள் சுருங்க,
கண் சிமிட்டியபடி உன்னை பார்க்கும் நான் கோழையல்ல,
கைக்கட்டை இருக்கியபடி தண்டனைகள் தரும்
நீதான் கோழை..