Sunday, April 19, 2015

காலொடிந்த நாற்காலி

காலொடிந்த நாற்காலி ஒன்று அழுதுகொண்டே இருக்கிறது,

ஸ்டோர் ரூமின் ஜன்னல் வழியே, கால்களே இல்லாத ஏதோ ஒன்றை கயிற்றில் தொங்கவிடப்பட்டிருப்பதை அது விசித்திரமாக பார்க்கிறது.

அதனை துடைப்பதற்கு கூட யாருமே இல்லை,

முன்பு ஒரு காலத்தில் அதற்காக இடப்பட்ட பெயர் ஒன்றை நினைவிலிருந்து மீட்டுக்கொண்டிருக்கிறது.

ஏன் ஒருவர்கூட அதன் காலை சரிசெய்ய முயற்சி எடுக்கவேயில்லை என்பதை நினைத்து நினைத்து குமுறுகிறது,

காற்றில் அவ்வப்போது சுற்றி சுற்றி விளையாடும் ஊஞ்சலின் மீதான கோபம் மட்டும் பெருகிக்கொண்டே இருக்கிறது.

ஒரு திடீர் இரவில், பூனை ஒன்று அதன் மீது உறங்க எத்தனித்தது,

வலிதாங்க முடியாமல் "கீச்"சென சத்தமிடவே,
மீண்டும் அனாதையானது...
காலொடிந்த நாற்காலி.

Saturday, April 18, 2015

ஒரு நொடி

ஒரு ரயில் பயணத்திலோ,
பேருந்தின் ஜன்னலோர சஞ்சாரத்திலோ,
மொட்டைமாடியின் நட்சத்திர வெளிச்சத்திலோ,
ஒரு நீண்ட கனவிலோ,
கடற்கரையில் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போதோ,
அலுவலகத்தில்  ேவலை பார்த்துக்கொண்டிருக்கும்போதோ,
ஒரு குழந்தையை கொஞ்சிக்கொண்டிருக்கும்போதோ,
பூங்காவில் நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருக்கும்போதோ,
யாரோ,
யவரோ,
எங்கோ,
யாரையோ,
உன் பெயரை சொல்லிக் கேட்டால் மட்டும் போதும்,
காற்றில் வீசிச்செல்லும் ஒரு பூவின் வாசமாய்,
ஒரு நொடி வந்துபோகும் சிரிப்பாக என்றுமே நினைவில் இருக்கிறாயடி...
♥♥

Wednesday, April 8, 2015

இசை பைத்தியம்


ஆபீஸ் முடிந்து பெருங்களத்தூர் ரயில் நிலையத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடல் கேட்கத்தொடங்கியிருந்தேன். சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பக்கத்தில் நின்றிருந்தார். சட்டென கருப்பு ஹெட்செட்டையும், மைக்ரோமேக்ஸ் பேசிக் மாடல் மொபைலையும் எடுத்து, ஓரக்கண்ணில் ஒரு பார்வை பார்த்தபடியே காதில் சொருகிக்கொண்டார். தாம்பரத்தில் பக்கத்தில் அமர்ந்த அவர் "புத்தன், காந்தி, ஏசு பிறந்தது பூமியில் எதற்காக" என்ற பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தது அப்பட்டமாக கேட்டது. குரேம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம் வருகையில் மிகவும் உக்கிர நிலையில் தலையை ஆட்டி ஆட்டி பாடலை ரசித்துக்கொண்டிருந்தார். சில சமயம் சூப்பர் சிங்கரில் வரும் ஜட்ஜுகள் ரசிப்பதுபோல கட்டைவிரலை மற்ற விரல்களில் வைத்து இசையை எண்ணிக்கொண்டிருந்தார். 30 நிமிடம் கழித்து "சைதாப்பேட்டை வந்துட்சா" என்று கேட்டார். கோடம்பாக்கம் தாண்டி, நுங்கம்பாக்கம் போய்ட்டு இருக்கோம் ஜீ என்றேன். சட்டென செல்போனில் யாருக்கோ கால் செய்து "சனியனே அரமணிநேரம் கழிச்சி கால் பண்ண சொன்னனே ஏண்டி பண்ணல " என்று யாரையோ திட்டியபடியே ரயிலை விட்டு இறங்கி விட்டார். வாழ்க்கையில் முதல் முறையாக இசை பைத்தியத்தியத்தை பார்த்துவிட்டேன்.