Monday, March 14, 2016

பேனாக்கள் மீதான காதல்

பேனாக்கள் மீதான காதலென்பது அலாதியானது. எங்கள் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை பென்சிலில் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவார்கள். பரீட்சையில் பக்கத்தில் உயர் வகுப்பு மாணவர்கள் யாராவது பேனாவில் எழுதிக்கொண்டிருந்தாலே, எனக்கும் ஆசை வந்துவிடும். பரீட்சை முடித்து, பாதியாய் பேப்பரை மடக்கி, "அண்ணா !! கொஞ்சம் பேனா தாங்களேன்" என்று என் பெயரை எழதிக்கொண்டு, கட்டம் போட்டு டிசைன் வரைந்துகொண்டிருப்பேன். நான்கு, ஐந்தாம் வகுப்புகளில் பேனாக்கள் வசப்பட்டாலும் அதன் மீதான காதல் வேறொரு பரிமாணத்தை அடைந்திருந்தது. எவ்வளவுக்கு எவ்வளவு பேனாக்களின் நிப்பை(Nib) உபயோகிக்கிறோமோ, அவ்வளவு மிருதுவாக எழுதும் பேனாக்களுக்கு வகுப்புகளில் எப்பொழுதுமே மௌஸ் தான். விட்டு விட்டு எழுதினாலோ, கொர கொரவென கீறினாலோ, வகுப்பிலேயே பேனாவை தரமாக வைத்திருப்பவனிடம்தான் எடுத்துச்செல்வார்கள். ஒரு பாதி ப்ளேட் மட்டும்தான் அவன் ஆயுதம், நாக்கை கீரி, நிப்பை வளைத்து சாஃட்டாக எழுதவைத்துவிடுவான். இதற்காகவே, இரண்டு நாளைக்கு ஒருமுறை, "பேட்டைக்காரனை"போல் பேனாவை அக்கக்காக கழட்டி, துடைத்துவிடுவேன், தரமான ப்ரில் இங்க்கை மட்டுமே உபயோகிப்பேன், பேனாவை கொஞ்சம் கூட லீக் அடிக்காமல் பார்த்துக்கொள்வேன்.  

ஒவ்வொரு வகுப்புகள் கடந்து செல்லும்போதும் பேனாக்கள் தன் குணாதிசியங்களை நமக்கேற்றாப்போல் மாற்றிக்கொண்டு, காலேஜில் "ரூட்டுத்தல" கெட்டப்பில் படு ரவுசாக வலம்வரும். விரல்களின் இடுக்குகளில் ஆடிக்கொண்டோ, விரல்களை சுற்றிக்கொண்டோ, வாயில் கடிக்கப்பட்டுக்கொண்டோ, நோட்டுகளில் சொருகியபடியோ, பாக்கெட்டில் மாட்டியபடியோ, சர்வ சுதந்திரத்தையும் அடைந்திருக்கும். படித்ததை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த ஸ்கூல் காலம் மாறி, புரிந்ததையும், புரியாததையும் எழுதிக்கொண்டிருக்கும் விடலைப்பேனாக்களின் விளையாட்டே விளையாட்டுதான்.

இத்தனை வருடங்களாக என்னுடனேயே பயனித்துக்கொண்டிருந்த பேனாவை நான் எப்படி மறந்தேன் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது,
மொபைல்களில் எழுதப்படும் இவற்றை என் பேனாக்கள் எழுதியிருந்தால் இன்னமும் அழகாக எழுதியிருக்கக் கூடும். அன்பளிப்புகளுக்கான தன் இருப்பில் இருந்து பேனாக்கள் தாங்களாகவே ராஜினாமா செய்தனவா என்பது கூட விளங்கவில்லை ? யாருமே ஒரு பேனாவை அன்பளிப்பாக அளிக்க மறுக்கிறார்கள் அல்லது மறக்கிறார்கள். என் ஆசையெல்லாம் யாருக்காகவாவது நான் ஒரு பேனாவை பரிசளிக்கும்போது, அவர்கள் சிரிக்காமல் இருக்கவேண்டும் என்பது.  யாராவது எனக்கொரு பேனாவை பரிசளிக்கவேண்டுமென்பது.