Tuesday, June 30, 2015

போதை

அவன் தெரிந்தே செய்யும் தவறுக்குள் இருக்கும் போதைப்புகையை மூர்க்கத்தனமாக இழுத்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறான்.

எப்படியோ அவனுக்கு தேவையான ஒன்றை அவன் கண்டுகொண்டுவிட்டான்.

வக்கிரப் புன்னகை ஒன்றை அவ்வப்போது சிரித்துக்கொண்டு,

எறும்புகளை சிரித்தபடி நசுக்கிக்கொண்டு,

எண்ணங்களால் அவள் உடலில், விரல்களை ஓடவிட்டுக்கொண்டு,

ஆடைகளை உற்றுப்பார்த்துக்கொண்டு.ஒரு இலையை பிய்த்துக்கொண்டிருக்கிறான்.

துரோகங்களின் வாசனை அவனுக்கு பிடித்துப்போயிருக்கவேண்டும்.

இச்சைகளை அணலாய் எரியவிட்டு குளிர்காய்ந்து கொண்டு,

எதுவெல்லாம் துரோகமென்று எண்ணிக்கொண்டு,

யாரோ ஒருத்தியின் வருகைக்காக காத்திருக்கிறான்.

அதோ வந்துவிட்டாள். !!

ஹாய் செல்வி..

Thursday, June 25, 2015

த்தா பாத்துப்போடா


அம்மாவின் வருகைக்காக ஆர்.கே நகரே அல்லோலகல்லோலமாய் இருந்தது. சாதாரன நாளிலேயே மார்க்கெட் சாலையில் ஹாரன் அடித்து சென்றால், திரும்பி பார்த்து சிரித்துவிட்டு (பொருமையா பின்னாடி வா தம்பி என்று அர்த்தம்) செல்வார்கள். மக்களின் முதல்வர் வருகையென்றால் சொல்லவாவேணும். ரோட்டோர நாய் கூட "அந்த கருமத்த அழுத்தாம.போயேண்டா, "கொய்ங் கொய்ங்குனு" அமுக்கிட்டு கெடக்க என்று திட்டிவிட்டுதான் செல்லும். எப்படியோ கஷ்டப்பட்டு கடைக்கு தேவையான சாமான்களை வாங்கிப்போட்டுக்கொண்டு வண்டியை சீர விட்டேன். காய்கரிவிற்றுக்கொண்டிருந்தவரின் புட்டத்தில், என் வண்டியில் மாட்டி இருந்த "பை" ஒரு தட்டு தட்டியதில் ஆள் சற்றுத்தடுமாறிவிட்டார். திரும்பி நிமிர்ந்து

"த்தா பாத்துபோடா" (ஓ சேர்க்கவில்லை) என்றார்.

சின்ன வயதிலிருந்தே "ரட்சகனையும்" "அருளையும்" பார்த்து முருக்கேரி தூங்கிக்கொண்டிருந்த கழுத்து நரம்புகளளெல்லாம் மீண்டும் விழித்து, கை, கால்களெல்லாம் பரவி, கடவாயில் புகுந்து நாக்கு வழியாக பதில் பேசலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தது. "என்ன பாத்து சொல்லு, என் கண்ண பாத்து சொல்லு" போன்ற டயலாக்குகள் உச்சகட்ட கெட்ட வார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்பது எனக்கு தெரிந்ததே. சரி காந்தி வழியிலேயே சமாலிப்போம் என்றவாறு, முகத்தில் பொன்முறுவலாக ஒரு சிரிப்பை வரவைத்துக்கொண்டு "சாரிணே" என்றேன்..

அவர்காதில் என்ன கருமம் விழுந்ததென்றே தெரியவில்லை. சிரிக்கிறான் பாரு மூடிட்டுபோடா என்றார்.(சுய மரியாதை காரணமாக, கெட்ட வார்த்தைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது). கை நீட்ட நாம் ஒன்றும் புஜபலபராக்கிரமசாலி அல்லவே, இந்தாள எதாவது பண்ணியே ஆக வேண்டும் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
தா ரோட்டு நடுவுட விருச்சி போட்டு யாவாரம் பண்ணு, நாங்க ப்ளாட்பாரத்துல வண்டி ஓட்ரோம் என்றேன்(இங்கு நான் "ஓ" சேர்த்திருந்தேன், நெடிலா, குறிலா என்பது நினைவில்லை).

அமைதியா போய்ட்டான்னா அவன் நமக்கு அடிம, அசிங்கமா திட்டினான்னா வேற டெக்கினிக்க யூஸ் பண்ணிக்கலாம் என்று தயாராகிக்கொண்டிருந்தேன். ஒருவேல அடிச்சிருவானோ என்ற பீதியும் இருந்தது.

"ஏங்க கீழ விழுந்திருப்பேங்க" ஹாரன் அடிச்சிருக்கலாம்ல என்றார் சாந்தமாக.
"சூனா பானா , உன்னைய ஒன்னும் பண்ண முடியாது, இப்புடியே மெயின்டைன் பண்ணு" என்று சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

Wednesday, June 24, 2015

சுஜாதா

சுஜாதாவின் சிறுகதைகளை முதன்முறையாக படிக்கிறேன். புத்தகத்தின் மூலம் ஒரு ஆசிரியர் நம்மிடம் பேச முடியுமா என்ற கேள்விகள் எழுந்தால் , இந்த புத்தகத்தை படிக்கலாம். "Sudden fiction" என்ற கான்சப்டை தெள்ளத்தெளிவாக கூறி, இரண்டு வார்த்தைக் கதை, 55 வார்த்தைகளுடன் கதை என்று வெவ்வேறு கான்ஸெப்டுகளை உட்புகுத்தி, புத்தகம் முழுதும் நம்முடனே இருக்கிறார்.

புரியாத சில சிறுகதைகளிலின் முடிவில், "இது புரியவில்லையென்றால் Sudden fiction கான்ஸெப்டுக்கு நீங்கள் தகுதியானவரல்ல" என்ற வாத்தைகளின் மூலம், மீண்டும் படிக்கவைத்து புரியவைப்பது இவரின் சிறப்பு.

இரண்டு வார்த்தையில் கதையா ??.

எப்படி சாத்தியம் ?.

சாம்பில் கதைகளை பார்ப்போம்.

1. தலைப்பு : 2089ல் குழந்தை ஒன்று.
கதை : தங்கச்சினா என்னம்மா ??

2. தலைப்பு : கார்கில் வீரனொருவன் கிராமத்து நண்பர்களை சந்திக்கும்போது.
கதை : ரம் கொண்டாந்தியாடா ?

இரண்டு வார்த்தை கதைகளில் உள்ள சுவாரஸ்யமே, நாமாக கதையை உருவாக்கிக்கொள்வதன் சுதந்திரம்தான். இதனிடையில் தபாலட்டை கதைகள் என்று ஒரு யுத்தியை அறிமுகப்படுத்தியிருந்தார். அதாவது உங்களிடம் ஒரு பேனாவும், தபால் அட்டையும் மட்டும் இருந்தால் வார்த்தைகளை தேய்து, சேர்த்து, சுருக்கி எழுதும் ஒரு டெக்னிக்.எடுத்துக்காட்டாக ஒரு கதையைப் பார்ப்போம்.

"அவன் அந்த கம்பியைத்தாண்டி குதித்தான். யாரும் அவனை பார்க்கவில்லை, மறைந்து உட்கார ஏதுவான இடம். சேட்டு தந்த கம்பளி குளிருக்கு கண்டிப்பாக உதவும், மதியம் சாப்பிட்ட கோவில் புளியோதரை பேஷ், சில்லென வீசும் தென்றல் காற்றை கைநீட்டி ரசித்து, "சொர்க வாழ்க்க டா" என்கிறான் பிச்சைக்காரன்" என்று முடியும்.

இது வெறும் சாம்பில்களே. புத்தகத்தில் சிறுகதைகளோடு பேசவும், சிந்திக்கவும் வைத்து நம்முடனே பக்கத்தையும் திருப்பிக்கொண்டு இருப்பார் சுஜாதா. படிக்கத்தகுந்த புத்தகம்.

Sunday, June 14, 2015

பொய்டு தம்பி.....


சனிக்கிழமை இரவு 11.45 மணி.கம்பெனியில் சீனியர் ரிசோர்ஸ் ஒருவர் என்னிடம் வந்து,தம்பி கல்யாணம் ஆய்ட்ச்சாப்பா உனக்கு என்று கேட்டார்.

(ரிசோர்ஸ்ஸா ???? அப்டினா ?

அப்படின்னா அப்படித்தான். ஐ.டியில் அவன், அவள் என்ற பாகுபாடு,பிரிவினைகளே கிடையாது, எல்லாருமே கழுத்துக்கு மாலை போட்டு அலங்கரித்து கூட்டிச்செல்லும் ஆடுகளே, ரிசோர்ஸ்களே)

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அத்த ராத்திரியில் யார் இந்த மனுஷன், கல்யாணத்தைப் பற்றி விசாரிக்கிறார் என்று சற்று கலங்கியே இருந்தேன். "பயப்படாத தம்பி,கம்பியூட்டர் பேச மாட்டிங்குது, அதான் சும்மா பேசலாம்னு வந்தேன்" என்றவாரு ஆரம்பித்தார்.

எனுக்கு கல்யாணம் ஆய்ட்சிப்பா, நான் வீட்டுக்குபோற நேரம், வீட்ல பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் தூங்கிடுதுங்க. என் புள்ள கிட்ட நேர்ல பேசி 13 நாள் ஆவுதுப்பா என்று தன் சோகக் கதையை பெர்மிஷனே இல்லாமல் கட்டவிழ்த்துவிட்டார். அடுத்தவர்களின் வாழ்க்கை கதையை ஃபேஸ்புக்கிலும், சமூக வலைதலங்களிலும் படித்து பழக்கப்பட்ட எனக்கு, நேரல் ஒருவர் தன் வாழ்க்கை கதையை சொல்வது புதுமையாக இருந்தது.

தன் 7வயது மகன் வாட்சாப்பில் திட்டி அனுப்பிய ஆடியோ பதிவை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டே இருந்தார். சற்றே நினைவு திரும்பியவராய், தம்பி நீ எவ்ளோதான் எஞ்யாய் பண்ணி வேல பாத்தாலும், புள்ளைங்க முக்கியம், பொண்டாட்டியும் முக்கியும் என்று அழுத்தமாய் தன் ஒட்டுமொத்த ஏக்கத்தையும் அட்வைசாக தந்து, "சீக்கிரம் பொய்டு தம்பி" என்று வார்னிங் மணி அடித்துவிட்டு கிளம்பிவிட்டார்.

எனக்கு "பாஸ்" படத்தில் "கையெழுத்து போடாதீங்க......"என்று எருமை சானி அள்ளுபவன் கத்திக்கொண்டே ஓடி வரும் காட்சி சித்தரிக்கப்பட்டதைப்போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டிருந்தது.





Saturday, June 13, 2015

பேனா முனை...

நான் நின்றுகொண்டிருக்கிறேன். என் கையில் ஒரு பேனாவின் முனையில் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது. நடமாட்டமே இல்லாத அந்த பாலைவனத்தில் நான் யாரைக்குத்தினேன் என்பது புரியாமல் சுற்றிமுற்றி பார்க்கிறேன். ஒரு குழந்தை மட்டும் அழுதுகொண்டே தவழ்ந்து சென்றுகொண்டிருந்தது. மூன்று கால்கள் உடைய குழந்தை அது. பதறிவிட்டேன். வியர்த்துவிட்டிருந்தது. சிகப்பு மழைமேகம் சூழ, இரத்தத்தூரல் தூரத்தொடங்கியது. குழந்தை நனைந்துவுடன் இறந்திருந்தது. நான் அழதுகொண்டிருந்தேன். குற்றவுணர்ச்சியில் என் பேனாவை ஓங்கி என் கண்களில் குத்திக்கொண்டேன். கண்களில் இருந்து நீர் பீய்ச்சி அடித்தது. திடுக்கிட்டு எழுந்தேன். தங்கை நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது நீரைச் சொட்டவிட்டு விளையாடிக்கொண்டிருந்தாள்.

இரவு முழுக்க அந்த பாலைவணத்தில் இருந்ததைப்போன்று ஒரு உணர்வு. நாளையும் என் தங்கையை விளையாடச்சொல்லியிருக்கிறேன். :-)

Thursday, June 11, 2015

ஒருமணிநேர இரயில் பயணம்

ஒருமணிநேர இரயில் பயணத்தில்தான் எவ்வளவு நடந்துவிடுகிறது.

தரையைத்துடைத்தபடி புட்டத்தால் நகர்ந்து பிச்சை கேட்கும் ஒருவன்,

வெந்துபோன உடலைக்காண்பித்து காண்பித்து, வயிற்றுக்கு சோறு கேட்கும் ஒருவர்,

எதுவுமே பேசாமல் கையை மட்டும் நீட்டும், நொடுந்துபோன கிழவி,

தாயுடன் அழுதுகொண்டே பால் கேட்கும் பச்சிளங்குழந்தை,

மிரட்டியே காசு பிடுங்கும் திருநங்கை,

"இங்க பாத்திங்கனா சார்" என்று பாடம் நடத்தும்
சாத்துக்கொடி ஜூஸ் மிஷ்ஷின்காரர்,

மாம்பழ வியாபாரி,

ஊதுவத்தி, பர்ஃபி, பென்சில், பேனா விற்கும் மாற்றுத்திறனாளி,

இரயிலயே மூன்னால் ஓட விட்டு, பின்னால் ஓடி ஏறும் சாகசக்காரர்கள்,

எக்குத்தப்பாக காதலிக்கும் காதல் ஜோடி,

நடுப்பக்க பிரியர்கள்,

"Headset"டோடே பிறந்து வளர்ந்த இசைப்பிரியர்கள்,

"Watsapp" நோயாளிகள்,

நான்தான் எதையுமே செய்யாமல் மீண்டும் மீண்டும் ஒருபெண்ணையே கவிதையாக்கிக்கொண்டிருக்கிறேன்...
ஒரே பெண்ணை கவிதையாக்கிக்கொண்டிருக்கிறேன்.