Tuesday, November 3, 2015

போலிகளின் கவனத்திற்கு

நீங்கள் போலி என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் மனிதக்கூட்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான குறிப்புகளை நீங்கள் திருத்தியமைக்கவேண்டும். உங்கள் பார்வையை, உங்கள் நடையை, உங்கள் பேச்சை, உங்கள் சிரிப்பை கூட பலரும் உபயோகித்து வருகிறார்கள். உங்களுக்கான அடையாளங்கள் என்று நீங்கள் சொல்லிக்கொள்ளும் ஒன்றைக் கூட தற்போது உபயோகப்படுத்துவது சரியானதாக இருக்காது. ஏனெனில் அவை உங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பறவிக் கிடக்கிறது. எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான், நீங்கள் பயன்படுத்தும் ஆயுதத்தில் போலியான அன்பும் உண்டா ?. பாவிகளாகிய நீங்கள் போலியல்லாதவர்களைப் பார்த்து இதை கற்றுக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். போலியல்லாதவர்கள் பாவப்பட்டவர்கள். அவர்களிடம் தற்போது போலியில்லாமல் இருப்பது அன்பு மட்டும்தான். நீங்கள் மற்றவர்களுக்கு காட்டப்படும் அன்பில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தே தீரவேண்டும். உங்களுக்கான முகமூடிகளை கழட்டி வைத்துவிட்டு நடமாடுவதை பெருங்குற்றம் என்று நீங்கள் உங்களுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரிலோ, பாரளுமன்றக்கூட்டத்தொடரிலோ தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

போலித்துப்பாக்கிகள், போலி குண்டுகள், போலியான மலர்கள் என்று உங்கள் இன்ன பிற பொருட்களைப்போல உங்களை கண்டுகொள்ள ஏதுவாக நீங்கள் நடந்துகொள்ளவேண்டும். வாசமில்லாமல், சப்தம் இல்லாமல், சிதரல்களில்லாமல் எப்படி பூக்களும், துப்பாக்கிகளும், குண்டுகளும் வியாபாரமாக்கப்படுகிறதோ, அதே போன்று அன்பு இல்லாமலோ, அல்லது போலியான அன்புக்கான வரையரைகளை வகுத்துக்கொண்டோ உங்களை புழக்கத்தில் விட்டுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.