Tuesday, March 17, 2015

ஜன்னலோரம்

ஜன்னலோரம்
பஸ்ஸில்
தெரிந்தும் தெரியாமலும்,
மறைந்தும் மறையாமலும்,
மின்னும் பெண்ணே,
பொன்னே,
நான் பார்த்தும் பார்க்காமலும்,
சிரித்தும் சிரிக்காமலும்,
உன்னை வரைந்துகொண்டிருக்கிறேன்.♥♥

Monday, March 16, 2015

தாகம்

தாகமாக இருக்கிறது,

எனக்கு ஒரு டம்ளர் மழை வேண்டும்.

Sunday, March 8, 2015

என் கண்ணுக்கு மட்டுமே தெரிந்த நாய்குட்டி ஒன்று

என் கண்ணுக்கு மட்டுமே தெரிந்த நாய்குட்டி ஒன்று என்னை பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறது,

அதனை என்னால் விரட்டவே முடியவில்லை,

அதற்கு நான் உணவளித்ததாக நியாபகமேயில்லை,

ஏனோ தெரியவில்லை, நான் மகிழ்ச்சியாக இருக்கையில் என்மீது ஏறி விளையாடுகிறது,

என் சோகத்தில் அதுவும் பங்கெடுத்துக்கொள்கிறது,

என் ஆபத்துகளில் எச்சரிக்கையுடன் குரைக்கிறது,

என் படுக்கை அறையின் கால் மிதிக்கும் ஒரு அழுக்குத்துணி ஒன்றின் மேல் படுத்துக்கொள்கிறது,

பின்பு ஒருநாள் அது காணாமல் போய்விடுகிறது,

அதனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்,

என் பக்கத்துவீட்டுக்காரரிடம் தொலைத்த நாயைப் பற்றி விசாரிக்கிறேன். இதுவரை உங்கள் வீட்டில் நாயை பார்த்ததே இல்லையே என்கிறார்,

தெருவில் இஸ்திரிகடைக்காரரிடம் கேட்டேன்,

நான்கு கால்களும்,இரண்டு கண்களும், இரண்டு காதுகளும் கொண்ட ஏதோ ஒன்று அடிபட்டு  மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லப்பட்டதாக தெரிவிக்கிறார்,

மருத்துவமனையின் வாசலில் அழுதுகொண்டிருந்த இன்னொரு நாயிடம் விசாரிக்கச்சென்றேன்,
என்னைக்கண்டு அது பயந்து ஓடுகிறது,

கண் தெரியாத ஒருவர் "ச் ச் ச் ச்" என்றவாறு ஒருநாயின் தலையை தடவிக்கொடுப்பதைப்போல கைகளை அசைத்துக்கொண்டிருந்தார்,

பின்பு என் கண்ணுக்கு மட்டுமே தெரிந்த நாய்குட்டி ஒன்றை பற்றி அவரிடம் கேட்டேன்,

நேற்று ஒரு பிஸ்கெட் வாங்கிக்கொடுத்ததிலிருந்து என்னிடமே சுற்றிக்கொண்டிருக்கிறது "இதுவா பாருங்கள்" என்றான்.

எனக்கு ஒன்றுமே தெரியவில்லை,

நானும் அதற்கு பிஸ்கெட் கொடுத்திருக்கவேண்டும்,
ஒருமுறையேனும் அதன் தலையைக் கோதிவிட்டிருக்கவேண்டும்,
வாசலில் சுத்தமான துணியை விரித்திருக்க வேண்டும்,
தினமும் வாக்கிங் கூட்டிச்சென்றிருக்க வேண்டும்,

சார் உங்கள பாத்து நாய் கொலைக்குது, தள்ளி போங்களேன் என்றான்,

கொஞ்சிக்கொண்டிருக்கும் குருடனைப் பார்த்தால் கோபம் கோபமாக வருகிறது...

Thursday, March 5, 2015

விடியல்

ஒவ்வொரு முறை கண் உறங்கும்போதும்,
விழித்தெழும் விடியல் 15
வருடமாவது பின்னோக்கி செல்லாதா என்ற
ஏக்கத்துடனே இருக்கிறது ;(

Wednesday, March 4, 2015

யாராவது எனக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்

யாராவது எனக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்.

யாருமே இதுவரை எனக்காக ஒரு கடிதம் எழுதியதில்லை,

"அன்புள்ள" என்றுதான் ஆரம்பிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அன்பை எழுத்துவடிவில் பார்க்க ஆசையாக இருக்கிறது,

குறுந்தகவல்கள், ஈ-மெய்ல்களெல்லாம் மெய்யான அன்பை காட்டுவதாக தெரியவில்லை,

எனக்கு ஒரு பேனா முனையில் கைப்பட எழுதப்பட்ட கடிதம் தேவைப்படுகிறது,
அது ஒரு ரீஃபில் பேனாவாகவோ, இன்க் பேனாவாகவோ இருக்கலாம்.

அடித்தல் திருத்தல்களோ, எழுத்துப்பிழையோ கூட இருக்கலாம். எனக்கு தேவையானதெல்லாம், ஒருவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம்.

பக்கம் பக்கமாக எழுதவேண்டியதில்லை, ஒரு பத்தியாகவோ, ஒரு சில வார்த்தைகளாகவோ, ஒரே ஒரு வார்த்தையாகவும் கூட இருக்கட்டும்,

நான் அதனை பத்திரப்படுத்திவைக்க விரும்புகிறேன், பின்னொருநாளில் என் சந்ததிகளுக்கு படித்துக்காட்டுவேன்,

அனுப்புனர் இல்லாததொரு கடிதத்தை மட்டும் அனுப்பிவிடாதீர்கள்.
நான் உங்களை மறந்துவிடநேரிடும்.

எனக்கு நினைவிருக்கிறது,
நான் தேர்ச்சியடைந்தேனா இல்லையா என்பதை கடிதத்தில்தான் தெரிவிப்பார்கள்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஒரு நோட்டிஃபிகேஷன் சப்தத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட இது மேலானது என்று,

கடிதங்கள் ஏன் அவ்வளவு அரிதாகிவிட்டது என்பதை மட்டும் யூகிக்கமுடியவேயில்லை.

நான் ஒரு கடிதம் எழுதப்போகிறேன்.

அன்புள்ள ****.......

Tuesday, March 3, 2015

காரணமானவள்

நீ யார் என்பது என்னைத்தவிர யாருக்குமே தெரியாது....

நான் எழுதும் ஒவ்வொரு கவிதையும் உனக்காகத்தான்
என்பதை மட்டும் எப்படியோ கண்டுபிடித்துவி
டுகிறார்கள்.....

ஒரு மழைக்காலத்திற்காக காத்திருக்கிறேன்.

மழைக்காலத்திற்காக ஏனோ காத்துக்கொண்டிருக்கிறேன்..

ஒரு மழைக்காலத்தில்தான் அவளை சந்தித்தேன்.

அவளை தொட்டுவிட நினைக்கும் ஒரு மழைத்துளியைக்கூட தன் குடையைத்தாண்டி அவள் அனுமதித்ததேயில்லை,

மழையைத் தொட்டுவிளையாடும் விளையாட்டை யாரிடம் கற்றுக்கொண்டாள் என்றே தெரியவில்லை,

இவ்வளவு அழகாக நான் மழையை ரசித்ததே இல்லை,

ஒரு ஜன்னலின் கதவை இருக்க மூடி, கதகதப்பை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்துவிட்டேன், அறிவிளியாகவே இருந்துவிட்டேன்,

ஜன்னலின் சாரலில் நனைந்து விளையாடும் பெண் ஒருத்தி எப்படி என்னை மழையை ரசிக்கதூண்டினாள் என்பது புரியவேயில்லை,

உன்மையில் நான் மழைக்காக காத்திருக்கவில்லை,
ஒரு மழைக்காலத்திற்காக காத்திருக்கிறேன்.

Monday, March 2, 2015

பைத்தியக்கவி - 2

தனிமை கிடைக்கவே கிடைக்காதா என்று ஏங்குகிறான் ஒருவன் ??

கடற்கரைகளில் கூட அலைகள் அவனது தனிமையை முழுவதுமாக எடுத்துக்கொள்கிறது,

ஒரு நள்ளிரவில் பாலைவனத்தில் தனிமையை சந்திக்கச்செல்லும் பாதை முழுவதும், திங்கள் அவன் நிழலை தினித்து அனுப்புகிறது,

தூக்கத்தில்கூட யாராவது கணவில் வந்துவிடுகிறார்கள்,

உண்மையில் தனிமையில் செய்யக்கூடிய ஒரு காரியத்தைக்கூட,நாம் தனிமையில் செய்துகொண்டிருப்பதில்லை,

தனிமையில் கைப்பேசியுடனோ,

தனிமையில் காதலியுடனோ,

தனிமையில் பாடல்களை கேட்டுக்கொண்டோ,

தனிமையில் சுயஇன்பத்திற்கு முயற்சித்துக்கொண்டோ,

தனிமையில் ஒருகுழந்தைக்கு முத்தமிட்டுக்கொண்டோ,

தனிமையில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டோ,

தனிமையில் நடந்துகொண்டோ,

தனிமையில் சிரித்துக்கொண்டோ,

தனிமையில் இன்னும் என்னவெல்லாமோ செய்துகொண்டோ.....

தனிமையை தடுக்கும் ஒவ்வொன்றையும் அவன் வெறுக்க விரும்புகிறான்,

இப்போது கடல் அலைகளின் சத்தம் கேட்டால், அலைகளை திட்டுகிறான்,

அது அமைதியாவதாக நினைத்து சிரிக்கத்தொடங்குகிறான், அவன் சிரிக்கிறான்,

அவன் போகும் வழியில் யார் பேசினாலும், "பேசாதே, பேசாதே" என்றபடியே சொல்லிக்கொண்டு சிரிக்கத்தொடங்குகிறான்,

தெருநாய்களை கண்டு அவனுக்கு பயமே வருவதே இல்லை, "உஷ்ஷ்ஷ்" என்றபடி மீண்டும் சிரிக்கிறான்.

அவனுக்கான தனிமையை அவன் கண்டுகொண்டுவிட்டான்.

ஏனோ தெரியவில்லை தனிமையையே பார்த்திறாத இந்த பைத்தியக்கார மனிதர்கள் மட்டும் அவனை பைத்தியம் என்கிறார்கள்.