Thursday, July 30, 2015

இராமேஸ்வர தேவதை.....


(இது ஒரு கலாம் பதிவு)
ஒட்டுமொத்த ராமேஸ்வரத்தையும் சூடாக்கி, கடல்நீரையே கொதிநிலைக்கு கொண்டுவந்த திருப்தியில் சிரித்தபடி சீராய் இறங்கிக்கொண்டிருந்தது மாலை வேலைச் சூரியன். சூடான காபியை ஊதி ஊதி ஆத்துவதைப்போல, விடாமல் ஊதிக்கொண்டும், பெண்கள், ஆண்கள் என்று பாரபட்சமே பார்க்காமல் உடைகளை விளக்கியும் விளையாடிக்கொண்டிருந்தது கடல் காற்று. இந்தக் காட்சியை பாம்பன் பாலத்தில் நின்று ரசிப்பதற்கு டிவைனாகவே இருந்தது. ஒருவாராக ரிலாக்ஸாகி 6 மணி பேருந்தை பிடிப்பதற்காக, 5 மணிக்கே தங்கச்சிமடம் பேருந்துநிலைக்கு வந்திருந்தேன்.
அடுத்தடுத்து குஷியான நிகழ்வுகள் அடுக்குகளாக எப்போதாவது நிகழ்வதுண்டு.
அந்த வகையில் சுமார் 21 வயது மதிக்கத்தக்க இராமேஸ்வரத்து தேவதை ஒருவள் வாசல் தெளித்து கோலம்போட்டுக்கொண்டிருந்தாள். புள்ளிகளே இல்லாத கோலம் அது. அரிசி மாவுக்கோலம். புள்ளிகள் இல்லாமல் வளைத்து வரைவதும், கோணல் மாணல் இல்லாமல் பாம்பன் இரயில் பாலத்தை போல நேர்க்கோடு போடுவதுமென்று மிரட்டிக்கொண்டிருந்தாள். சில வினாடிக்கு ஒருமுறை நெற்றியின் வியர்வையை, பின்னங்கையால் துடைத்தெரியும் காட்சிகள் வேறு. வரைந்துமுடித்ததும் பற்களே தெரியாமல் ஒரு நமுட்டுச்சிரிப்பு. கண்ணத்தில் மட்டும்தான் இரண்டு புள்ளிகள். அவளின் இந்தக்கோலம்  ஏனோ ஈர்த்தது.
இவ்வளவையும் அவள் வீட்டுத்திண்ணையிலேயே அமர்ந்திருந்து பார்த்ததை ஜன்னல் வழியே அவள் டாடி பார்த்துக்கொண்டிருந்தது, அவர் பைப்போடு ஏதோ ஒரு பெயரைச்சொல்லிக்கொண்டு வெளிவந்தபோதுதான் தெரிந்தது. (தேவதைகளுக்கு எதற்கு பெயர்).
நான் கேஷுவலாக எனக்கு தெரிந்த ஒரே டெக்கினிக்கான ஹெட்செட்டை கையில் எடுத்தேன்.
"தம்பி பஸ்ஸுக்கு வெயிட்பண்ணுதா" என்று கரடுமரடான குரல் கேட்டது.
ஆமா ஐயா(கிராமங்களில் பெரியவர்களை ஐயா என்று அழைப்பதும் ஒரு டெக்கினிக்கே)
எந்த டிராவல்ஸூ ?
பர்வீனுங்கையா.
6 மணிக்காச்சே, சீக்கிரம் வந்துடீங்களோ ?(இங்குதான் அவர் டயத்தையும் நோட் செய்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன்)
ஊருக்கு புதுசுயா, பஸ்ஸ விட்ருவோம்ற பயத்துல சீக்கிரம்.வந்துட்டேன்.
இருக்கட்டும். தம்பி கொஞ்சம் தள்ளி போரிங்களா. தண்ணி ஊத்தனும் வாசல்ல என்று பைப்பை உயர்த்தினார். கோலம்போட்ட வாசலுக்கு  தண்ணி ஊத்த வரும்போதே தெரிந்துவிட்டது நான் மாட்டிக்கொண்டேன் என்று. உட்க்கார்ந்திருந்த திண்ணையில் தண்ணீரைப்பீய்ச்சி அடித்தார். பின்னாலேயே துடைப்பத்தை தலையில் ஒருதட்டு தட்டியவாரு அம்மையும் வந்தாள். பாட்டை ஆன் செய்யாமலேயே, பாடுவதைப்போன்று வாயசைத்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்தோ சில துளி தண்ணீர்கள் மேல வீசியது. கண்டிப்பாக, திண்ணையை துடைக்கும் அம்மாவாகத்தான் இருக்கும். இன்னும் தூர போகசொல்றாங்கபோல என்பதை தெரிந்துகொண்டு. அவள் வரைந்த அப்துல்கலாமின் கோலத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வலதுபக்கம் திரும்பினேன். பஸ் வரும் வரை அந்தப்பக்கம் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான் கோலத்தையும் ரசித்தேன் என்பதை எப்படி நிரூபிப்பதென்பதே புரியாமலேயே கிளம்பிவிட்டேன்.

Monday, July 27, 2015

கடலில் இருந்து வந்த பட்டாம்பூச்சி

இப்போதெல்லாம் பட்டாம்பூச்சிகளை எளிதல் தேடிவிட முடிவதில்லை,

அதன் வண்ணங்கள் கூட மறந்தேபோய்விட்டது,

விமானங்களைக் கூட நொடிக்கு ஒன்றை பார்த்துவிடுகிறேன்,

ஆனால் பட்டாம்பூச்சிகள்.....

நான் ஒரு கடற்பயணம் மேற்கொண்டிதுந்தேன்,

இலக்கு என்னவென்றே தெரியாத ஒரு ஆழ்கடற்பயணம் அது.

வீசப்பட்ட ஒரு சூழ்ச்சிவளையின் மேல், சின்னச் சிறகை அழகாய் பறப்பி அமர்ந்திருந்தது ஒரு கடற்பட்டாம்பூச்சி.

அது ஒரு கருப்பு பட்டாம்பூச்சி,

விஷப்பூச்சிகள்தான் கருப்பாய் இருக்குமாம்.
கேள்விப்பட்டிருக்கிறேன்.

பயந்தே போனேன், விரலில் அமர்ந்தது,

பயணத்தின் ஒரு கருப்பு இரவில், தோளில் கிடந்தது இன்னமும் நினைவிருக்கிறது.

புயல், மழை, பேய் காத்து வீச
தொலைந்தே போனது பட்டாம்பூச்சி,

அவ்வப்போது நீந்தி வரும் டால்ஃபின்களை கேட்பதுண்டு,

கருப்பு பட்டாம்பூச்சி ஒன்றை கரைசேர்த்ததுண்டா என்று,

சுறாக்களும், நண்டுகளும் கூட கையை விரித்துவிட்டது,

கடலில் பூக்களே கிடையாதாம்,

இருந்திருந்தால் வேறொரு கருப்பு பட்டாம்பூச்சியை அவை கை காண்பித்திருக்கக்கூடும்,

விரக்தியில் கருப்புப்பட்டாம்பூச்சியை வரையத்தொடங்கியிருந்தேன்.

சட்டென படகு உடைந்து கரையை நோக்கிய விபரீத நீச்சல் பயணம் ஒன்றின்போது,

அது என்னுடனேயே பறந்துவருகிறது. பட்டாம்பூச்சியாய் அல்ல, வண்ணத்துப்பூச்சியாய்.

எங்கிருந்து வந்ததிதற்கு இத்தனை வண்ணங்கள் என்றதற்கு,

150 வயது கடலாமை சொன்னது,

அது பைசாசப்பூச்சியாம்,

எண்ணங்களை மீட்டெடுத்து வண்ணம்தீட்டிக்கொள்ளும் பைசாசப் பட்டாம்பூச்சியாம்.

Tuesday, July 21, 2015

கூண்டுப்பறவை

அது ஒரு வி்சித்திரமான
பறவை,

கூண்டுக்குள்
அடைபட்டிருந்தது,

அதன் கதவுகளை
திறந்துவிட்டேன்,

அது பறக்க மறுத்து,
என் தோள்
தேடி அமர்ந்தது,

அதன் மொழி
எனக்கும் புறிந்தது,

தன் முதலாளி
நல்லவனாம்,

அழுதுகொண்டே
புலம்பியது,

பின்பு திறந்திறுந்த
கூண்டுக்குள் சென்று,

மீண்டும்
அமர்ந்துகொண்டு,

தன் கதவைத்
தானே சாத்தி,

என் பறவை
ஒன்றை பற்றி,

விவரமாக
சொல்லக் கேட்டது,

நான் பறவைகளை
வளர்த்ததே இல்லை....!!

பறவைகளை விரட்டியிருக்கிறேன்,

பறவைகள தின்றுருக்கிறேன்,

ஒருவேளை வளர்க்க
நேர்ந்தால்,

இறக்கைகள் உள்ள பறவைகளைத்தான்
வளர்ப்பேன் என்றேன்,

இப்பொழுது கூண்டுக் கதவு மீண்டும் திறக்கப்பட்டது,

தன் முதலாளி நல்லவனாம்,
உள்ளிருந்தபடியே
மீண்டும் கீச்சியது.

Sunday, July 12, 2015

நான் ஜமீன்டா (Fast fiction 2)

அரச இலைகளின் கைதட்டல்களோடு, சிட்டெறும்புகளின் செல்லக்கடி ஒன்றை வாங்கியபடிதான் கண் விழிப்பார் ஜமீன்தார். "ஏன் சாமி இந்த எடத்துல படுக்குறீங்க" என்று ஒருவரும் இதுவரை அவரை எதிர்த்து கேள்வி கேட்டது கிடையாது. ஜமீன்தார் தினமும் ஒரே தட்டில்தான் சாப்பிடுவார். அவருக்கு உணவு சமைத்து தருவதற்காகவே பணிப்பெண் ஒருத்தியை அவர் வீட்டிற்கு அருகாமையிலையே குடிப்பெயர்த்தார். மழை வரும் நேரங்களில் மட்டும் ஜமீன்தார், பணிப்பெண்ணின் வீட்டை நோக்கி நடப்பதை சுற்றியிருப்பவர்கள் கவனித்திருக்கிறார்கள். ஜமீன்தாருக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. ஜமீன்தாரின் குளிருக்கு இதமான இடம் அதுதான். அவருக்கு மூன்று பிள்ளைகள், மூவருக்கும் சேர்த்து திருமண செலவு மட்டும் 80 லட்சம் ஆகியதாக பீத்திக்கொள்வார். அடிக்கடி "நான் ஜமீன்டா !!ஆமாதானே ?? " என்று அதட்டியபடி மீசையை முறுக்கி விடுவதில் ஒரு மனத்திருப்தி அவருக்கு.

அன்று ஒரு இரவில் பலத்த மழை பெய்தது. ஜமீன்தார் சமையல்காரியின் வீட்டை நோக்கி நகர்ந்தார். வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர் படுத்து உறங்கும் திண்ணை இடிக்கப்பட்டிருந்தது. அவருக்கான பழைய சோறு மட்டும் அதே தட்டில் வைக்கப்பட்டிருந்தது. "நான் ஜமீன்டா" என்று மீசையை முறுக்கி தட்டை எடுத்துக்கொண்டு அரசமர அரண்மனைக்கே திரும்பிச்சென்றார்.