Saturday, September 16, 2017

பரம்பிகுளம்

இது ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் என்பதையே ஒரு மாதம் முன்புதான் தெரிந்துகொண்டேன். வர்க் டென்ஷ்னில் இருந்து மீள , மலை, மழை, மரம், பச்சை, அருவி, ஏரி, குளம், ஈரம் என்று எங்காவது இரண்டு நாள் மொபைல் நெட்வர்க்கே இல்லாத இடத்திற்கு தொலைந்து போய்விடவேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட செக்ஷுவல் அர்ஜுக்கு நிகரான அர்ஜில் இந்த ப்ளான் போடப்பட்டது.
கோயம்பத்தூரில் இருந்து 90 கி.மீட்டரில் உள்ள கேரளத்து மலைக்கிராமம் மற்றும் டைகர் ரிஸர்வ்ட் ஃபாரஸ்ட்தான் இந்த "பரம்பிகுளம்".
பரம்பிகுளத்தில் தங்குவதற்கு சில முன்னேர்ப்பாடுகள் செய்ய வேண்டும். கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் பராமறிக்கப்படும் இந்த காட்டுக்குள் தங்குவதற்கான ரூம் கட்டணங்கள், இடத்திற்கு தகுந்தாற்போல் மாறும். "ஹனிகோம்ப்" ஸ்டே என்ற இடம் இருக்கிறது. இது பரம்பிக்குளத்தின் மலை உச்சியில் இருக்கும் கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் ஸ்டேயிங் PGக்கள். ஒரு அரைக்கு 6100 ரூபாய். வார நாட்களில் இன்னும் விலை குறைவு. மூன்று வேலை உணவும் தந்துவிடுவார்கள். ஏ.சி வசதியும் உண்டு.
"Tree stay" வும் இருக்கிறது. இது ஒரு அழகான ஏரியில் வளர்ந்திருக்கும் இரண்டு மரங்களின் இடுக்கில் கட்டப்பட்டிருக்கும் ஒரு தனித்த வீடு. இந்த அரையில் இரண்டுபேர் மட்டுமே தங்க அனுமதி. ஒன்லி ஃபார் பேர்ஸ்.
மற்றொன்று "Island stay" பரம்பிக்குளம் அணையில் இருக்கும் தீவுக்குள் தங்குவது. 5 பேர் மட்டும் தங்கக்கூடிய அறை. உணவைச் சேர்க்காமல் 10,000 வரை சார்ஜ் செய்கிறார்கள். என்னென்ன திண்ண ஆசையோ, அதை பட்டியலிட்டால் மட்டும் போதும், மூலப் பொருட்களுக்கான விலையை மட்டும் வாங்கிக்கொண்டு சமைத்துத் தருவார்கள்.
நாங்கள் ஹனிகோம்ப் ஸ்டேவில் இரண்டு ரூம்களை 2 வாரம் முன்பே புக்செய்துவிட்டோம்.

வெள்ளிக்கிழமை ஆஃபிஸ் அலுப்பை உதரித்தள்ளிவிட்டு 10 மணியளவில் பெங்களூரி்ல் இருந்து கோயம்பத்தூருக்கு கிளம்பினோம். பேசி வைத்திருந்த வேன் சரியாக 9 மணிக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே சிக்மங்களூருக்கு இப்படித்தான் ப்ளான் போட்டு, படுமோசமாக சொதப்பிவிட்டதால், கொஞ்சம் பயத்தோடுதான் மலை ஏறினோம். பொள்ளாச்சி தாண்டி, மேற்கு தொடர்ச்சி மலையை அடைந்ததுமே காற்றின் குளிர்ச்சி முகத்தில் வீச ஆரம்பித்துவிட்டது.
பரம்பிக்குளம் போகும் முன்பு தமிழகத்தின் பார்டரில் "டாப் ஸ்லிப்" என்று ஓர் இடம் இருக்கிறது. யானை சஃபாரி, மற்றும் ஃபாரஸ்ட் ஜீப் சஃபாரி செய்துகொள்ளலாம். நாங்கள் 1 மணிக்கு பரம்பிக்குளத்தில் இருந்தாக வேண்டும். அங்கு சுற்றுவதற்கே ஏகப்பட்ட இடம் இருப்பதாக ட்ரைவர் லிஸ்ட் போட்டார்.
பரம்பிக்குளத்திற்கு பைக்கில் செல்ல அனுமதி கிடையாது. வெறும் கார் மற்றும் வேன்தான். அதுவதும் தனியாகச் செல்ல அனுமதி இல்லை. வனத்துறையின் வண்டிகள் அல்லது ப்ரைவேட் வண்டிகளாக இருந்தால், "Guard" ஒருவர் நம்முடனேயே கூட வருவார். அவர்தான் பரம்பிக்குளத்தில் சுற்றிப்பார்ப்தற்கு எல்லா இடத்திலும் கூடவே உதவி செய்வார். சிறப்பு என்னவென்றால் அங்குள்ள மலை வாழ் மக்களுக்கு அரசாங்கமே Guard ஆவதற்கான ட்ரெய்னிங்கும், Watcher களுக்கான ட்ரெய்னிங்கும் தந்து தினம் 350 ரூபாய்க்கு பணியில் அமர்த்தியிருக்கிறது.
1.30 மணிக்கு ஒரு வழியாக இடத்தை அடைந்ததுமே இன்ப அதிர்ச்சி, சிக்கன் குழம்புடன் உணவு. மூன்று வேலை உணவு இலவசம் என்று இதுவரை திண்ற இடத்திலெல்லாம் சாம்பார் மஞ்சள் தண்ணீர் மாதிரியும், ரசம் சுடு தண்ணீர் மாதிரியும்தான் இருந்து பார்த்திருக்கிறேன். இங்கு ரசம் ரசம் மாதிரியே இருந்தது, சிக்கன் குழம்பு, சிக்கன் குழம்பு மாதிரியே இருந்தது. கழுத்துவரை தின்றுவிட்டு ஒரு மணிநேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, முதல் ட்ரெக்கிங்கிற்கு கிளம்பினோம். கார்டு முரளி தயாராக இருந்தார். மழை லேசாக தூரல் இட ஆரம்பித்திருந்தது.
ஃபார்மல் ட்ரெக்கர்கள் கிடையாது என்பதால், சாதாரனமாகவே கிளம்பிவிட்டோம். வெறும் ரோட்டோரமே அங்க பாருங்க, இங்க பாருங்க என்று முடித்துவிடுவார் என்று நினைத்தால், முரளி சடாரென்று காட்டுக்குள் புகுந்துவிட்டார். ஒரு ஜான் அளவுள்ள ஒற்றையடிப்பாதைதான். அதுவும் மனிதற்களால் ஏற்படுத்தப்பட்டது கிடையாது. மழைநீர் ஓடி ஓடி அதுவாக உருவாகியிருந்த அடர்ந்த காட்டுப்பாதை. மேலே வானம் கூட தெரியாத அளவிற்கு கரும்பச்சை காட்டுக்குள், ஆயிரக்கணக்கான சில்வண்டுகளின் "கிரீச்" சத்தத்தில் நிறைந்திருக்கும் ஆள் அரவமற்ற இடத்தில், அதுவும் எப்போது வேண்டுமானாலும் காட்டும் பன்றியும், யானைகளும்,புலிகளும், கரடிகளும் எதிரில் வந்து ஹாய் சொல்லும் ஆபத்தான காட்டுவழி ட்ரெக்கிங்க் எக்ஸ்பீரியின் எல்லாம் வேர லெவல்.



5 கி.மீ நடந்து காமராசர் காலத்தில் கட்டப்பட்ட டன்னல் ஏரியாவிற்கு வந்தடைந்தோம். மலையில் ஊற்றெடுத்து வரும் தண்ணீரெல்லாம் அருவியாக விழும் இடத்தில் 1962களிலேயே மிகப்பெரிய டன்னல் அமைக்கப்பட்டு, டேமிக்கு திசைதிருப்பியிருக்கிறார்கள். கேமராக்களுடன் செல்லும் செல்வந்தர்களும், ஃபோட்டு ஃபீரீக்குகளும் இந்த இடத்திலேயே கரடியிடம் கடிபட்டாலும் பரவாயில்லை என்று டேரா போட்டுவிடுவார்கள். மழை வேற ஜோராக அடிக்க ஆரம்பித்துவிட்டது. சில்வண்டுகள் 1000 ல் இருந்து லட்சங்களாக கூட்டு சேர்ந்துவிட்டதுபோல் தோன்றியது. அதிவேகமாக ரூமிற்கு மீண்டும் காட்டுப்பாதை வழியாகவே சென்றோம்.
7 மணிக்கு ட்ரைபல் டேன்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். எதிர்ப்பார்த்த ஹிப்புகளுன் ஒருவரும் இல்லை. எல்லாம் கிழவிகள்தான். ஆனால் டான்ஸ் பார்க்க அன்றைய தினம் பரம்பிக்குளத்தில் ஸ்டே செய்யும் ஃபிகர்கள் எல்லோரும் இங்குதான் வருவார்கள் என்பதால் ஜாலியாக ஸைட் அடிக்கலாம்.
அன்றைய டின்னரை முடித்து தூங்கலாம் என்று படுத்திருந்தால், கூட வந்த நண்பன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலி வலி என்று பீதியைக் கிளப்பிவிட்டான். இந்த அத்த ராத்திரியில், அதுவும் காட்டுக்குள் என்னத்தை செய்வது என்று சமையல் செய்பவர்களிடும் உதவி கேட்டோம். அவ்வளவு பதட்டத்துடன் தடால் புடால் என்று போன் கால்கள் பறந்து, வண்டியை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். எதிர்ப்பார்க்காத பலதுகளை வைத்திருக்கிறது பரம்பிக்குலளம் என்று ஆச்சர்யப்பட்டோம்.
அடுத்தநாள் 6.30 மணிக்கொல்லாம் முரளி வந்துவிட்டார். இன்னொரு ட்ரெக்கிங், Parambikulam dam பார்ப்பதற்காக கிளம்பிவிட்டோம். அதுமுடிந்ததும் ஒரு "போட் ரைட்", பின்னர் காலை உணவை முடித்துவிட்டு பெட்டி படுக்கையுடம் 450 வருடம் பழைமையாக தேக்கு மரத்தை பார்ப்பதற்காக மீண்டும் ஜங்கல் சஃபாரி. இத்தனையும் 6100 ரூபாய்க்குள்ளேயே அடங்கும். மேற்கொண்டு எந்த செலவும் நீங்கள் செய்யவேண்டியதில்லை.

எல்லாவற்றையும் முடித்துவிட்டு 12.30க்கு பரம்பிகுலத்தில் இருந்து இறங்கினோம். முரளியிடம் வேறு எங்காவது ட்ரெக்கிங் போலாமா என்று கேட்டதற்கு. 10 கி.மீ ட்ரெக்கிங் ஒன்று இருப்பதாகச் சொன்னார். அதற்கு 5 நபர்களுக்கு 1200 ரூபாய். முன்பு சென்ற காட்டைவிட படுபயங்கரமான காடு என்றார்.
1 மணிக்கு ட்ரெக்கிங்கை தொடங்கினோம். தொடக்கத்தில் எள்ளலும் ஏசலும், கிண்டலும் கேலியுமாகத்தான் இருந்தோம். காட்டுக்குள் செல்லச் செல்லச் பயம் பீடித்துக்கொண்டது. அதுவும் ஆள் உயர கரடி ஒன்று கண் முன் வந்து போனதும், ஒன்னுக்கு வர ஆரம்பிவிட்டது. நல்லவேலயாக கரடி பயந்துபோனதால் தப்பித்தோம். பின்னர் முரளி சொன்னார். அந்தக் காட்டில் 120 Leopardகள், 29 புளிகள், நிறைய யானைகள், கொஞ்சம் கரடிகள் இருப்பதாக. அதற்குபின் கப் சிப் என்று காட்டைக் கடந்தோம். கண்டிப்பாக எல்லா அனுபவத்தையும் வார்த்தையால் சொல்லிவிடமுடியாது.
அங்கிருந்து 4 மணிக்கு கிளம்பி, டீ, ஸ்னாக்ஸ், டின்னரை முடித்து 8 மணிக்கு பெங்களூருக்கு கிளம்பிவிட்டொம். இரண்டு நாள் ட்ரிப்புக்கு ஏற்ற இடம். அதுவும் மேற்கு தொடர்ச்சி மலையின் மழைக்காலத்தில் செல்வதே உகந்த நேரம்.
இதுவரை தாய் தந்தையரையோ, காதலியையோ, மனைவியையோ எங்குமே வெளியில் கூட்டிச்சென்றதில்லை என்று நினைப்பவர்கள் இருந்தால் கண்டிப்பாக பரம்பிகுளத்திற்கு ப்ளானைப் போடுங்கள். ஆவ்சமாக இருக்கும்.

https://parambikulam.org/

Friday, March 17, 2017

சர்க்காரின் வாள்


காய்ந்த கோடை ஒன்றின் நண்பகளில் தவளைக்குளக்கரையிலும் அம்முச்சிமரத்தடியிலும் மக்கள் திரளாக வந்து குவிந்தவண்ணம் இருந்தார்கள். பால் விற்பனை, பஞ்சாயத்து, ஊர்க்காவல்தெய்வம் என்று எல்லாமே தவளைக்குளக்கரைதான். அம்முச்சிமரம் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூன்தாத்தாவுக்கே தெரியாது. அவ்வளவு பழைய கதை. கோடைக்கால விடுமுறை என்பதால் வண்டு சிண்டுகளும் கூட்டம் கூட்டமாக குளத்தில் கல்லெரிந்துகொண்டும், விழுதில் தொங்கிக்கொண்டுமிருந்தார்கள்.

ஹேராவுக்கு அம்முச்சிமரம் பிடிக்கும், அம்முச்சி மரத்தடியில் நிகழும் நிகழ்வுகளைப்பற்றி தன் தோழி ஒருத்தி சொல்லிய கதையைக்கேட்டே இங்கு வந்திருக்கிறாள். நொண்டிக்கிழவியுடன் தங்கியிருக்கிறாள். ஹேராவும் நொண்டிக்கிழவியும் ஒரே ஜாதி. ஹேரா வந்த நாளிலிருந்து "இருந்த இடத்திற்கே போய்விடு", "இருந்த இடத்திற்கே போய்விடு" என்று தலையைக் குட்டிக்கொண்டேயிருப்பாள். நொண்டிக்கிழவி துறத்திக்கொண்டே இருப்பதும் பயந்துகொண்டே பேசியதும் ஹேராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. கூட்டம் கூடிய நண்பகல் அடிக்கடி குளக்கரையில் தலையை நனைத்துவிட்டும், தண்ணீர் குடித்துவிட்டும் திறும்பி வருவாள்.
ஏன் இவ்வளவு பதட்டத்துடன் தள்ளாத வயதில் அங்கும் இங்கும் பறந்துகொண்டே இருக்கிறீர்கள் என்றதற்கு. கண்ணீர் விட்டு அழுதே விட்டாள் நொண்டிக்கிழவி.

'ஹேரா, இங்கே இருப்பவர்களை கவனித்தாயா ?' என்றாள் கிழவி.

'ஆம் கவனித்தேனே', மனிதர்கள்தானே ? என்றாள் ஹேரா.

கொஞ்சம் சினுங்கிவிட்டு சிரித்தாள். பைத்தியக்காரி என்று திட்டிவிட்டு தான் இதுவரை பார்த்த அம்முச்சி மர சடங்குகளைப் பற்றி ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தாள்.

..........................

"40 வருடத்திற்கு முன்பு அம்முச்சிமரம் பற்றி கேள்விப்பட்டு இங்குவந்தேன். ரம்யமான காற்றும், குளத்தின் ஈரமும் வருடம் முழுக்க பறந்துகொண்டே இருந்தாலும் சோர்வடையவே செய்யாது. பல இரவுகளை இங்கு நிம்மதியாக கழித்திருக்கிறேன். இதே மாதிரி ஒரு நாள் மக்கள் அனைவரும் கூடியபோது விசித்திரமான உடையணிந்த மனிதன் ஒருவன் கையில் எதையோ வைத்துக்கொண்டு அனைவரையும் வரிசையில் நிற்கும்படி செய்தான். வரிசையில் நின்ற அனைவரும் உற்ச்சாகமாக இருந்தார்கள். தங்கள் குடும்பங்களுடன் இந்த குளக்கரை பக்கம் மக்களை இதுவரை ஒருமுறைகூட பார்த்திறாத எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் ஒவ்வருவராக அந்த விசித்திர ஆடை அணிந்தவனிடம் கையை நீட்டி, ஒரு நீண்ட ஊசியில் இரத்தம் சொட்டும்படி குத்து வாங்கிக்கொண்டார்கள். சொட்டிய மறுகணம் மடியை ஏந்து ஒரு கல்லை வாங்கிக்கொண்டார்கள். ஒட்டுமொத்த கிராமமும், ஒருவர் பின் ஒருவராக தன் கையில் ரத்தம் சொட்ட சொட்ட ஊசி குத்து வாங்கிக்கொண்டு கல்லை பெற்றுக்கொண்டார்கள். பின்னர் ஏதோ பேசிக்கொண்டு உற்சாகமாக கத்திக்கொண்டு குளத்தில் ஒவ்வொருவராக கல்லை எரிந்துகொண்டு பேரானந்தத்துடன் வீடு திரும்பினார்கள். அன்றிலிருந்து மக்கள் இந்த குளத்திற்கு அடிக்கடி வந்துபோனார்கள்.

இந்த அதிசய கிராமத்தைப் பார்த்து என் சொந்தபந்தங்களை எல்லாம் கூட்டிவந்து 10 ஆண்டுகாலம் இந்த அம்முச்சிமரமே கதி என்று வாழ்ந்தும் ஒருமுறைகூட அந்த சடங்கு மறுபடி நிகழவே இல்லை.
ஒரு அடர்ந்த இருள் நாளில் குளத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது யாரோ என் கழுத்தை நெருக்கி தூக்கிக்கொண்டுபோய் விழுதொன்றோடு கட்டிவிட்டார்கள். எவ்வளவு கத்தியும் பயணில்லை, யாரைக்கூப்படுவதென்று கத்திக் கத்தி நடுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து சொந்தங்களும், தோழிகளும் ஆளுக்கொரு திசையாக கிளம்பிவிட்டார்கள்.
உயிர் பயத்தில் இருந்தபோது மீண்டும் மக்கள் கூட ஆரம்பித்தார்கள். இந்தமுறை ஏன் இருட்டில் கூடுகிறார்கள் என்பது விளங்கவேயில்லை. அதே விசித்திர ஆடை அணிந்த ஒருவனிடம் இப்பொழுது கண்களைக் கருப்பு துணி ஒன்றால் கட்டிக்கொண்டு வந்தவண்ணம் இருந்தார்கள். இந்தமுறை அவனிடம் இருந்தது ஊசி இல்லை, கோடாலி. மனிதர்கள் அப்போதெல்லாம் அதை வைத்துதான் மரம் வெட்டிக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொருவராக கால்களை மரப்பலகை ஒன்றில் அழுத்திபடி நின்றுகொண்டார்கள். விசித்திர மனிதன் ஓங்கி கால் சுட்டுவிரலை வெட்டிவிட்டு, கண் கட்டை அவிழ்த்து "விடுதலை" "விடுதலை" என்று கத்தினான். ரத்தம் வழிய மக்களும் "விடுதலை" "விடுதலை" என்று கத்தினார்கள். எப்படி இவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள் என்பது இன்றுவரை எனக்கு விளங்கவே இல்லை. ஊரில் இருந்த அத்தனைப்பேரும் விரலை வெட்டிக்கொண்ட பின்பு. இந்த கிளிக்கும் விடுதலை தாருங்கள் என்று விசித்திர மனிதனிடம் யாரோ கூறவே, என் விரலையும் வெட்டுகிறேன் என்று  வெட்டிவிட்டான். குருடனுக்கு சுண்டு விரல் எது என்பது தெரியாததால் மொத்த விரல்களையும் வெட்டிவிட்டான் கிராதகன். எப்படியோ நொண்டி நொண்டி குளக்கரையிலேயே பல நாட்கள் கிடந்து இந்த பொந்துக்குள் தஞ்சம் புகுந்தேன்" என்றாள் நொண்டிக்கிழவி.

ஹேராவுக்கு பயம் தொற்றிக்கொண்டது. தன்னிடம் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததாக தன் தோழி கூறவேயில்லையே என்று எண்ணியபடி மக்களை நோட்டம் விட்டாள். யாருடைய கால்களிலும் சுட்டுவிரல் இல்லை. கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. திகிலுடன் மரத்தில் நின்றுகொண்டிருந்தபோது, விசித்திர ஆடை அணிந்த மனிதன் ஒருவன் இவ்வாரு பேசிக்கொண்டிருந்தான்.

"கடந்த 30 ஆண்டுகளாக இந்த அரசாங்கம் உங்களுக்கு விடுதலை அளித்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் நன்மைக்காகவும், மகிழ்ச்சிக்காகவுமே இந்த அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நாட்டில் நிலவும் பஞ்சம் காரணமாக நாட்டு மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்குவதில் அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி வந்திருக்கிறது. உணவுப்பொருட்களையும், தானியங்களையும் ஏற்றுமதி செய்யமுடியாமல் அரசாங்க கஜானா காலியாகிக் கொண்டேயிருக்கிறது. அரசாங்க கஜானாவை செம்மைப்படுத்தும் வகையிலும், நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கம் வகையிலும் சர்க்கார் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தன் நாக்கைவெட்டிக்கொள்ளத் தயராக இருக்கும் ஒவ்வொருவருக்கும் சர்க்கார் சார்பில் வேலை வாய்ப்பும், ஒரு வேளை அரிசி உணவும், இரண்டு வேளை புண்ணாக்கும் வழங்கப்படும். இந்த சலுகையை உடனடியாக அமல்படுத்தவேண்டி சர்க்கார் உத்தரவு பிறப்பித்துள்ளது "

பின்னர் மக்கள் ஆர்ப்பரித்து ஆராவாரத்துடன் சர்கார் வாழ்க சர்கார் வாழ்க என்று கோஷம் போட்டபடி, விசித்திர மனிதனிடம் தன் நாக்கை நீட்டிக்கொண்டு வரிசையில் நின்றனர். இந்தமுறை சர்க்காரிடன் இருந்தது ஒரு நீண்ட வாள். பல பலவென மின்னிக்கொண்டிருந்தது. ரத்தம் படிந்த நாக்குச் சதையும், மக்களின் மகிழ்ச்சியும் ஒழுகியபடி நாக்குகளை ஒவ்வொன்றாக, குறல்களை ஒவ்வொன்றாக சீவிக்கொண்டிருந்தது.

நொண்டிக்கிழவி கண்ணீர்விட்டபடி மரப்பொந்து நோக்கி நொண்ட ஆரம்பித்தாள்.

ஹேராவுக்கு பேச்சுவரவில்லை என்று நாக்கில் மிளகாய் தடவியபோதுதான் கூண்டில் இருந்து தப்பித்துவந்தாள். தன்னை வளர்த்த மனிதர்கள் யார் ? அவர்களுடைய நாக்கை வெட்ட ஏன் சர்க்கார் ஆட்களை அனுப்பவில்லை ? இந்த கிராமத்தில் ஏன் யாருக்கும் வலியே இல்லை ?  நொண்டிக்கிழவி ஏன் இன்னமும் இந்தபொந்துக்குள்ளேயே இருக்கிறாள் ? சிறகுகள் இருந்தும் பறக்காமல் இந்த மக்கள் மீது அப்படி என்ன விசுவாசம் அவளுக்கு ? விசித்திர ஆடைக்குள் இருப்பது சர்க்கார்தானா ? என்று சிந்தித்தபடியே அம்முச்சிமரத்தை விட்டு பறந்துவிட்டாள்.

Monday, February 13, 2017

செய்மோஃபோபியா

எனக்கு செய்மோஃபோபியா.
2012 ஏப்ரல் மாத நிலநடுகத்திலிருந்து என்னுடன் ஒட்டிக்கொண்டது.
கொஞ்சம் அதிர்வுகளை உணர்ந்தாலும் பதட்டத்துடன் ஒளிந்துகொள்ளத் தோதுவான இடத்தை நோட்டம்விட தொடங்கிவிடுவேன். தூக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி மூச்சிறைத்து விழித்த எண்ணற்ற நாட்களில் கட்டலின் இருப்பிடத்தையோ அல்லது ஒரு மேஜையின் இருப்பிடத்தையோ உறுதி படுத்திக்கொள்வேன். ஒருமுறை அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் மலையைக் குடைந்துகொண்டிருந்த அதிர்வின் பீதியில், கச்சிதமாக டேபிலின் அடியில் உட்காரமுடிகிறதா என்று ஒத்திகைப்பார்த்துக்கொண்டேன்.
ரயில் அதிர்வுகள் என்னை ஒன்றும் செய்ததுகிடையாது. நான் மனநோயாளி இல்லை என்பதை உணர்ந்துகொண்டதே ரயில் பயணங்களில்தான். மனஅதிர்வை கணித்து முன் எச்சரிக்கையாக ஒளிந்துகொண்டு தப்பித்துக்கொள்ளும் ஃபோபியாக்களை எப்படி வரவைத்துக்கொள்வது ?

Monday, October 10, 2016

ரேஷ்மி என் பால்யகால சினேகிதி

நானும் ரேஷ்மியும்
பால்யகாலத்து சினேகிதர்கள்.
அவள் உச்சுக்குடுமியும்,
குட்டைப் பாவாடையும்
அணிந்து வந்த காலத்தில்
அழி்ப்பான்களில்
அஞ்சு கல் விளையாடியதைத்
தவிற வேறு ஒன்றுமே
நினைவில்லை எனக்கு.

கொஞ்சம் அலசினால்
புருவத்திற்கும், நெற்றிக்கும்
கருத்த "மை" வைத்த
எலுமிச்சை நிற முகம்
மட்டும் மங்களாக
நினைவில் வந்துபோகும்.

14 வருடங்களாக "ரேஷ்மி"
ஒரு பெயராக என்னுடனேயேதான்
இருந்திருக்கிறாள்.
அவள் சாயலில்
பலமுறை பலரைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு முறை ஒருவனுடன் பைக்கில்,
மற்றொரு முறை ஒரு திரையரங்கில்,
ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தில்,
சில  நிகழ்ச்சியில்,
சில முறை என் நண்பனின் கைப்பேசியில்,
சில் முறை யாரோ ஒருத்தியின்
குரலில்.

பிரியங்காவும், லதாவும்
ரேஷ்மியை மாதிரி நினைவில்
இருந்ததேயில்லை,
பிரியங்காவையும், லதாவையும்
கடந்து சென்றதைப் போல
ஒரு முறைகூட ரேஷ்மி என்னும்
பெயரை கடந்ததில்லை.

பின்னர் ஒரு வாட்ஸாப் குரூப்பின்
வாயிலாக தொடங்கப்பட்ட கான்வர்சேஷனில்,
மீண்டும் நுழைகிறாள்
ஆவியின் ஆகிருதியாக.

இப்போது
ரேஷ்மியிடம்
பேசிக்கொண்டுதானிருக்கிறேன்.
ரேஷ்மியை
பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன்.

ரேஷ்மியை பார்த்ததில்லை,
ரேஷ்மியிடம் பேசியதில்லை.
சினேகிதிகளில் இவள்
ஒரு ரகம்,
ஒரு வகை.

ஆழ்கடல் சிப்பிக்கள் முத்தை எப்பொழுதும் துப்புவதில்லை.

Tuesday, September 20, 2016

மாலதியின் கடைசி நாட்கள்


தன் நீங்கா வலிக்கு
மருத்துவம் பார்த்து
கேன்சரோடு திரும்பிய
மாலதியின் கடைசி
நாட்கள்

கீமோ இருக்கு மாலதி
கல்லைக்கூட கரைக்கும்
என்ன.....
முடி கொட்டும்
மொட்டை அடித்துக்கொள்
மூட்டு வலிக்கும்
படுக்கையில் படுத்துக்கொள்
உணவு வேண்டாம்
மாத்திரை விழுங்கிக்கொள்
3 நாளில் கேன்சர் கரையும்
மூத்திரம் முழுக்க மஞ்சளாய்ப் போகும்

அய்யோ அம்மா...
இரத்தம் இரத்தம்.....
கண்ணங்கள் ஒட்டி
நடை தளர்ந்து
டாக்டர் கை பிடித்து
கரைந்ததா என்கிறாள்.

நிதானம் மாலதி
வயிற்றில் கரைந்து,
அடிவயிற்றில் பரவுது
தண்ணீர் கொல்லாது,
தூக்கம் வராது,
எப்படியாவது
மாத்திரையை மட்டும்
திண்றிடு தீர்த்திடு
அடுத்த கீமோவில்
கண்டிப்பாய் ஒழித்திடலாம் என்கிறார்.

வலி வலி வலி வலி
வலி வலி வலி வலி
பேச்சும் வலி
மூச்சும் வலி
படுக்கையில் விழித்தாள்
சுற்றி சொந்தங்கள்
அழுகிறாள் அழுகிறாள்
அழுகிறாள் அழுகிறாள்
அழுகிறாள் சிரிக்கிறாள்

ஒரு நபருடனான கடைசி சந்திப்பு
எப்படியெல்லாம் நிகழக்கூடாது
என்று நினைத்தாளோ,
அதுவெல்லாம் நிகழ்கிறது.

"மாலதி தைரியமாக சாவு
பிள்ளைகளை நன்றாய் வளர்த்திருக்கிறாய்
பிழைத்துக்கொள்வார்கள்"

அவளுக்கான ஆறுதல்களை
நினைத்து நினைத்தே
அழுதாள் அழுதாள்
அழுதாள் சிரித்தாள்
சிரித்தாள்
இறந்தாள்........

Monday, September 19, 2016

இந்த மரணத்தை...

இந்த கவிதைகளை
ஒரு தீப்பந்தத்தைப் போல
கையிலேந்தியபடிதான்
ஒவ்வொரு மயானத்தையும்
தனிமையில் கடந்துவருகிறேன்.

கழுகின்காலில் சிக்கித்துடித்து
தப்பி விழும் பாம்பைபோல
மரணம் தப்பி மரணிக்கிறேன்
வாழ்ந்தே தீரவேண்டும் என்று...

விலகல்

அன்பே
முழுமையான விலகுதலுக்கு
இன்னும் என்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளவில்லை

எனக்கு சில
காரணங்களும், காலங்களும்
தேவையாக இருக்கிறது.

என் காதலை இதுவரை உன்னிடம்
சொன்னதே இல்லாத பட்சத்தில்
"ஏன் இந்த
தடாலடி முடிவு ?"

புறநானுாறையும், சிலப்பதிகாரத்தையும் மொபைல் ஆப்பில் பார்த்து
என்னை பழமென்று நினைத்துவிட்டாயா ?

எனக்கு வில்லியம் ஹாம்சையும்
அர்த்தர் ஸ்கோஃபன்ஹியரையும்
கூட தெரியும்.

ஆடம்பர உடைகள் மட்டும்தானே
பிடிக்காதென்றேன்,
கண்களையும், பற்களையும்
கண்ணக்குழியையும் அல்லவே !!

சொல்லாமல்
காதல் செய்ய
கற்றுக்கொடுத்து
இப்படி பாதியில் விலகுவது
சரிதானா ?
சரி
வருத்தம் கொள்ளாமல்
விலகுவது எப்படி என்பதையாவது
விளக்கிவிட்டு போ...

ஆலிங்கனம் செய்து,
கண்ணீர் சிந்தி,
விரல் நுனிவரை விடைதரும்
சம்பிரதாயங்களை
தினம் தினம்
நான் கனவில் நடத்திக்கொள்கிறேன்.

Saturday, September 17, 2016

நிர்வாணம்

குளியலைறையில் நீண்ட
கண்ணாடி வைத்திருப்பவர்களை
மிகப் பெரிய கலைஞர்களாக நினைத்துக்கொள்.

நிர்வாணம் அவ்வளவு அழகு
யாருமற்ற வீட்டில்
நிர்வாணமாக நடந்து கொண்டு
நிர்வாணமாக சமைத்துக்கொண்டு
நிர்வாணமாக படித்துக்கொண்டு
நிர்வாணமாக படுத்துக்கொண்டு
நிர்வாணமாக குளித்துக்கொண்டு

ஏதோஒன்றில் இருந்து முழுவதுமாக நம்மை விடுவித்துக்கொண்டு வாழ்தல் அவ்வளவு அலாதியானது.

நனைந்த உன் நிர்வாண உடம்பை ஒருமுறையேனும் நீ பார்க்கத்தான் வேண்டும்.

தகித்த நீர்த்துளிகள்
மெல்ல வழிந்து
உன் வேட்கையின் சிரிப்பில்
உயிர்ப்பெரும் இன்னொரு
நிர்வாணக் குளியல்.